இந்தியாவில் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 134 பேர் பலி, பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது… உயிரிழப்பு 2,549 ஆக அதிகரிப்பு!

Read Time:3 Minute, 9 Second

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரையில் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கையும் 3 லட்சத்தை நெருங்கிவிட்டது.

வைரசுக்கு எதிராக மருந்து எதுவும் இல்லை. இந்தியாவிலும் கொரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்து வருகிறது. சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தினசரி இந்த வைரஸ் தொற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் தொடக்கத்தில் ஊரட்ங்கு காரணமாக குறைந்திருந்த தொற்று, தற்போது வேகம் எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் புதிதாக கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினந்தோறும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கடந்த 24 மணி நேரங்களில் வைரஸ் தொற்றால் புதிதாக 3,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78,003 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் இதே 24 மணி நேரத்துக்குள் 134 பேர் பலியானதாகவும் கூறப்பட்டு உள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கையும் 2,549 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் 26,234 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 49,219 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மராட்டியம் இருந்து வருகிறது. அங்கு மட்டும் 25,922பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக குஜராத்தில் 9,267 பேரையும், தமிழகத்தில் 9,227 பேரையும், டெல்லியில் 7,998 பேரையும், ராஜஸ்தானில் 4,328 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 4,173 ஆகவும், உத்தரபிரதேசத்தில் 3,729 ஆகவும் உள்ளது. தென்மாநிலங்களான ஆந்திராவில் 2137 பேரும், தெலுங்கானாவில் 1367 பேரும், கர்நாடகாவில் 959 959 பேரும், கேரளாவில் 534 பேரும், புதுச்சேரில் 13 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.