தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது, சென்னையில் தொடர்ந்து அதிகரிப்பு.!

Read Time:4 Minute, 10 Second

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 509 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 227 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 984 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2 ஆயிரத்து 176 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சை பலனின்றி 64 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதில் சென்னையில் 1 வயது பெண் குழந்தை உட்பட 36 குழந்தைகள் மற்றும் 344 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து விட்டது. நேற்று வேளச்சேரி, கண்ணகி நகர், புளியந்தோப்பு, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டுமே இதுவரை 42 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடுகிற முதல் நிலை பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது கவலைக்குரியது.

மாநிலத்தில் நேற்று (மே 13) திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா 25 பேரும், திருவண்ணாமலையில் 8 வயது பெண் குழந்தை உட்பட 23 பேரும், கடலூரில் 17 பேரும், விழுப்புரத்தில் 7 பேரும், தேனி, நெல்லை மற்றும் தமிழக விமான நிலைய முகாம்களில் தலா 5 பேரும், காஞ்சீபுரம், அரியலூரில் தலா 4 பேரும், கரூர், மதுரை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், தூத்துக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஒருவரும் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பச்சை மாவட்டமாக மாறியது

தமிழகத்தில் கொரோனா வைரசின் பாதிப்பு தொடங்கிய முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் பச்சை மாவட்டமாக இருந்தது. ஆனால் தற்போது கிருஷ்ணகிரியிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 20 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாநிலத்தில் ஒரு பச்சை மாவட்டம் கூட இல்லாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி 6 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்தது. இதில் 69 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துவிட்டார். அதைத்தொடர்ந்து அங்கு புதிதாக கடந்த 28 நாட்களாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் தற்போது ஈரோடு பச்சை மாவட்டமாக மாறியிருக்கிறது.