கொரோனாவினால் அடுத்த 6 மாதத்தில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் என எச்சரிக்கும் ஆய்வு தகவல்!

Read Time:4 Minute, 37 Second

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கிய பிறகு, பிற மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் குழந்தைகள், கர்ப்பிணிகள் பெருமளவில் பாதிப்பை எதிர்க்கொண்டு உள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு காரணமாக 100-க்கும் மேலான ஏழ்மை நாடுகளில் ஆரம்ப சுகாதார மையங்கள் சரிவர செயல்படவில்லை. இந்த நாடுகள் பலவற்றில் மக்கள் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றால் குறைந்தபட்சம் 20 கி.மீ. தூரமாவது பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு உரிய மருத்துவ வசதி கிடைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடுவதும் கடந்த 4 மாதங்களாக நின்றுபோய்விட்டது. ஊட்டச்சத்து மாத்திரைகள், குழந்தைகளுக்கு சொட்டு மருந்தும் கொடுக்கப்படவில்லை. இதுதவிர டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்களில் சுமார் 85 சதவீதம் பேர் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அதிகம் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களது முழு கவனமும் இப்போது கொரோனா மீதே உள்ளது.

மேலும், இவர்கள் கிராம பகுதிகளுக்கு சென்றால் கொரோனா பீதியால் இவர்களைக் கண்டு மக்கள் அஞ்சி ஓடும் நிலைதான் காணப்படுகிறது. இதனால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு போதிய மருத்துவ வசதி கிடைக்காத சூழலும் ஏற்படுகிறது. இதுபோன்ற அறியாமை பெண்களின் சுகாதாரப் பிரச்சினைக்கு பெரும் சவாலாக அமையும் என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.

இதன் காரணமாக குழந்தைகள், கர்ப்பிணிகள் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகி வருகிறது. இப்பிரச்சினை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள 118 நாடுகளில் காணப்படுகிறது எனவும் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. பல நாடுகளில் பள்ளிக்கூடங்கள் மூலமாகத்தான் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கிறது. கொரோனா பரவிய பிறகு பள்ளிகள் மூடப்பட்டு கிடப்பதால் இவர்களுக்கு முறையாக உணவு கிடைப்பது கிடையாது. இதனால் ஊட்டச்சத்து கிடைக்காமல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெரும் அபாயத்தை சந்திக்க நேரிடலாம்.

இந்த சிக்கல் காரணமாக அடுத்த 6 மாதங்களில் ஐந்து வயதை எட்டி பிடிப்பதற்குள் 12 லட்சம் குழந்தைகள் வழக்கத்தை விட கூடுதலாக உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத ஒன்றாக இருக்கும் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கிறது. குறிப்பாக பிரேசில், பாகிஸ்தான், நைஜீரியா, மாலி, சோமாலியா ஆகிய 5 நாடுகள் பெருமளவில் குழந்தைகள் உயிரிழப்பை சந்திக்கும் என எச்சரிக்கிறது. இதேபோல் கர்ப்பிணிகளும் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். உலகம் முழுவதும் இவர்களில் 4 லட்சம் பேர் வரை உயிரிழக்க நேரிடும் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக யுனிசெப் அமைப்பின் தலைமை சுகாதார அதிகாரி ஸ்டீபன் பீட்டர்சன் கருத்து தெரிவிக்கையில் “ஏற்கனவே இந்த பாதிப்பு தொடங்கிவிட்டது. இதற்கான காரணம் நீங்கள் வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது காரணமாக இருக்கலாம். மருத்துவ சேவையை பெறுவதற்கு பயந்ததாக இருக்கலாம்” என்று கூறுகிறார். அடுத்த 6 மாதங்களுக்குள் கூடுதலாக 12 லட்சம் குழந்தைகள் மரணத்தை எதிர்க்கொள்வார்கள் என்ற தகவல் பெரும் சோகமானதாக உள்ளது.