இங்கிலாந்தில் புகழ்பெற்ற இந்திய பெண் மருத்துவ வல்லுநர் கொரோனா வைரசுக்கு உயிரிழப்பு, மக்கள் கண்ணீர்…

Read Time:6 Minute, 33 Second

இங்கிலாந்தில் புகழ்பெற்ற இந்திய பெண் மருத்துவ வல்லுநர் பூர்ணிமா நாயர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தார்.

இங்கிலாந்து நாட்டில் கவுண்டி டர்ஹாமில் உள்ள பிஷப் ஆக்லாந்து ஸ்டேஷன் வியூ மெடிக்கல் சென்டரில் பணியாற்றி வந்தவர் மருத்துவர் பூர்ணிமா நாயர் (வயது 55). இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். 1994-ல் இங்கிலாந்து சென்று அந்நாட்டின் தேசிய சுகாதார சேவை மையத்தில் பணியாற்ற தொடங்கினார். புகழ் பெற்ற மருத்துவ நிபுணராக செயல்பட்டார்.

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து முன்வரிசையில் நின்று போராடுகிற மருத்துவர்களையும், நர்சுகளையும், சுகாதார பணியாளர்களையும் விட்டு வைப்பதில்லை. அவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் பூர்ணிமா நாயரையும் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்கியது.

இதனையடுத்து தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஸ்டாக்டன் ஆன் டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைக் காப்பாற்றுவதற்கு டாக்டர்கள் போராடினார்கள்.
கடந்த மார்ச் 27-ம் தேதி முதல் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அவர் நேற்று முன்தினம் (மே 12) மரணம் அடைந்தார். அவருக்கு தாயார், கணவர், ஒரு மகன் உள்ளனர்.

டாக்டர் பூர்ணிமா நாயரையும் சேர்த்து இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு பலியான டாக்டர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இறுதிக்கட்டத்திலும் கொரோனாவுடன் மிகவும் கடுமையாக போராடியுள்ளார். பல்வேறு நோயாளிகள் என்ன நோய் என்றும் தெரியாமல் சென்ற போதும் அவர்களுக்காக போராடி குணம் அடைய செய்துள்ளார். அவருடைய கனிவான பேச்சும், மருத்துவ செயலாற்றலும் அப்பகுதி மக்கள் மனதில் அவ்வளவு நிறைந்து உள்ளது. அவருடைய மறைவு செய்து அப்பகுதி மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது என்பதை அவர்கள் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொள்வதில் இருந்து தெரிகிறது.

பூர்ணிமா நாயர் மரணத்தில் இருந்து தனது தாயாரை எப்படி காப்பாற்றினார் என்பதை நினைவுகூர்ந்து ஒரு பெண் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பூர்ணிமா நாயரின் ஆன்மா சாந்தி அடைவதாக. அவர் கண்டறியப்படாததும், உயிருக்கு ஆபத்தானதுமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயாரின் உயிரை 10 ஆண்டுகளுக்கு முன்னர் காப்பாற்றினார். அவருக்கு எங்கள் குடும்பம் என்றும் கடமைப்பட்டிருக்கும். அவரது வாழ்வு இவ்வளவு குறுகியகாலத்தில் முடிந்தது எங்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று பல்வேறு வினோதமான நோயினால் பாதிக்கப்பட்டவர்களை, தன்னுடைய அன்பு, அறிவுக்கூர்மை, சேவை மற்றும் நம்பிக்கையூட்டல் மூலமாக குணப்படுத்தியுள்ளார். அவருடைய இழப்பு பெரும் இழப்பாக அமைந்துள்ளது மனித குலத்திற்கு.

அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் பணியாற்றிய பிஷப் ஆக்லாந்து ஸ்டேஷன் வியூ மெடிக்கல் சென்டர் விடுத்துள்ள அறிக்கையில், அனைவரால் நேசிக்கப்பட்டவரும், மதிப்பு மிக்கவருமான பூர்ணிமா நாயர் இறந்து விட்டார் என்பதை அறிவிப்பதில் மிகவும் வருந்துகிறோம். மருத்துவர் நாயர் நீண்ட காலமாக கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில் மிகுந்த மன வலிமையுடன் உயிருக்கு போராடி வந்தார். ஆனாலும் அது பலனற்று பேரழிவை ஏற்படுத்தி விட்டது. இதற்காக வருத்தப்படுகிறோம். எங்கள் நினைவுகளிலும், பிரார்த்தனைகளிலும் டாக்டர் பூர்ணிமா நாயர் எப்போதும் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய மகன் வருண், என்னுடைய தாயார் மிகவும் அன்பானவர். தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, தன்னை நாடிவரும் அனைவருடனும் அன்பு பாராட்டுவார். அவர்களுக்கு தொடர்பு மகிழ்ச்சியையும் நேர்மறையான எண்ணங்களையும், நம்பிக்கையூட்டினார். அவருடைய வாழ்க்கையில் எடுத்த ஒவ்வொரு முயற்சியிலும் அன்பும், ஆர்வமும் அசைக்கமுடியாத அளவில் இருந்தது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

டாக்டர் பூர்ணிமா நாயர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது உறவினர்களும், நண்பர்களும், நோயாளிகளும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றனர். அவருடைய அன்பு, கனிவான பேச்சையும், சேவையாற்றலையும் பாராட்டி பலரும் வெளிப்படுத்திவருகிறார்கள்.

பிஷப் ஆக்லாந்து எம்.பி. டெஹென்னா டேவிசன் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் மருத்துவர் பூர்ணிமா நாயர், எங்கள் சமூகத்தில் மிகவும் அறியப்பட்டவர். மதிப்புமிக்கவர். அவரை அறிந்த அனைவரும் இனி அவரை பார்க்க முடியாமல் போனதற்காக மிகவும் வருந்துவோம். இந்த துயரமான தருணத்தில் என் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் அவரது நண்பர்கள், குடும்பத்தினர்கள் அனைவருடனும் இணைந்து இருக்கின்றன என தெரிவித்து உள்ளார்.