வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக வலுப்பெறும்: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

Read Time:3 Minute, 14 Second

அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும், இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடைமழை ஆங்காங்கே ஒருசில இடங்களில் பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்துள்ளது. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வானிலை மாலையில் மாறி மழை பெய்கிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும் (வியாழக்கிழமை) மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறுகையில், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளது. இது நாளை (மே 15) மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும். அதன்பின்னர் நாளை மறுதினம் புயலாக வலுபெறக்கூடும். இதனால் தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை வேகத்திலும், நாளை மறுதினம் 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், ஞாயிற்றுக்கிழமை 65 கி.மீ. முதல் 85 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என கூறியுள்ளார்.

அந்தமான் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி, அதிதீவிர புயலாகவே மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. இது வங்காளதேசம் அல்லது ஆந்திரா பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.. இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆனால் தமிழகத்தை ஒட்டி வந்தால், மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.