குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படும் கரும்புகள்… விவசாயிகள் வேதனை..

Read Time:3 Minute, 42 Second

கொரோனா ஊரடங்கு எதிரொலியாக விளைப்பொருட்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படும் நிலை நிலவுகிறது

குறைந்த விலைக்கு கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதால் செலவு செய்ததை கூட ஈட்ட முடியவில்லையே என்று விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாண்டு அப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.

10 மாத பயிரான கரும்பினை தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், கோடை காலத்தை முன்னிட்டும் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்வார்கள். பெரும்பாலான விவசாயிகள் பொங்கலின் போது அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவார்கள். சிலர் கோடை காலத்தில் கரும்பு சாறு கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பும் வகையில், மார்ச், ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்வார்கள்.

இப்படி கோடைக்காலத்தை நம்பி, சில விவசாயிகள் கோடை காலத்தில் கரும்பு சாறு கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பும் வகையில், அறுவடை செய்ய திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. மற்றும் தொடர்ந்து ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, பல்வேறு தொழில்களும் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன.

இருப்பினும் டீக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், குளிர்பான கடைகள் போன்றவற்றில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சாலையோரங்களில் கரும்பு சாறு கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான வியாபாரிகள், கரும்பு சாறு கடைகளுக்கு கரும்பினை கொள்முதல் செய்வதற்கு முன்வராத நிலை நிலவுகிறது.

இதனால் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு கரும்பை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கடந்த முறை 15 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.250-க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இம்முறையோ ஒரு கட்டு கரும்பு ரூ.130-க்குதான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கர் கரும்பு பயிரிடுவதற்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ரூ.20 ஆயிரத்திற்கு மேலும் செலவிட்ட விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.

செலவு செய்த பணத்தைகூட ஈட்ட முடியவில்லையே என்று வேதனை அடைந்துள்ளனர். இதேபோன்று அப்பகுதியில் உள்ள வாழை விவசாயிகளும் போதிய விலை கிடைக்கப் பெறாமல் நஷ்டம் அடைந்து உள்ளனர். எனவே, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கரும்பு, வாழை விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர்.