ரூ.9 ஆயிரம் கோடியையும் தந்துவிடுகிறேன் மல்லையா கெஞ்சுவதற்கான காரணம்… இனியும் தப்பிக்க இருக்கும் ஒரு வழி விபரம்:-

Read Time:6 Minute, 0 Second

‘கிங் பிஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (வயது 64) இந்தியாவில் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு முறையாக திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார்.

இவ்விவகாரத்தில் விஜய் மல்லையா மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்தன. ஆனால், இந்த வழக்குகளை சட்டப்படி சந்திப்பதற்கு அவர் இந்தியா வர மறுத்து விட்டார். இதையடுத்து அவரை சட்டப்படி இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் இதற்கு எதிராக விஜய் மல்லையா, லண்டனில் உள்ள இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

விசாரணை முடிந்த நிலையில் விஜய் மல்லையாவின் வழக்கை தள்ளுபடி செய்து ஏப்ரல் 20-ம் தேதி பரபரப்பு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. இந்த வழக்கை பொறுத்தமட்டில், விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு, இந்திய விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் கூறிய காரணங்களைவிட, மூத்த மாவட்ட நீதிபதி பரந்த அளவில் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக கூறியதை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொண்டோம். இந்தியாவின் குற்றச்சாட்டுகளுடன் 7 அடிப்படை அம்சங்கள் ஒத்துப்போவதை நாங்கள் பார்க்கிறோம். எனவே நாடு கடத்தலுக்கு எதிரான விஜய் மல்லையாவின் வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என நீதிமன்றம் அப்போது தெரிவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா, இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். அதற்கு உயர்நீதிமன்றம் 14 நாட்கள் அவகாசம் அளித்தது. உச்ச நீதிமன்றத்தி்ல் மல்லையா மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இங்கிலாந்து உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் இந்தியா, இங்கிலாந்து நாடுகள் இடையேயான கைதிகள் ஒப்படைப்பு சட்டத்தின் கீழ், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை தடுக்க மல்லையாவுக்கு இருந்த கடைசி சட்ட வாய்ப்பும் முடிந்துவிட்டது. இதையடுத்து, அடுத்த 28 நாட்களுக்குள் இந்திய அரசு சார்பில் மல்லையாவை தாயகம் அழைத்துவரும் பணிகளை தொடங்கலாம்.

இந்தியாவுக்கு ஆதரவாக வாதாடிய சிபிஎஸ் சட்ட அலுவலகம் சார்பில் “தன்னை நாடுகடத்தும் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுக்கள் 3 நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியாவின் கருத்து ஏற்கெனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது” என தெரிவி்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு, 20 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதி தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி டுவிட்டரில் கருத்த தெரிவித்துள்ள விஜய் மல்லையா, இது தொடர்பாக விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கொரோனா நிவாரண நிதி தொகுப்பு அறிவித்துள்ள இந்திய அரசுக்கு எனது பாராட்டுகள். எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவு ரூபாயை இந்திய அரசு அச்சிட்டுக் கொள்ளலாம். ஆனால், பொதுத்துறை வங்கிகளிடமிருந்து நான் கடனாக வாங்கிய பணத்தை திருப்பித் தர தயார் என்று தொடர்ந்து சொல்லி வந்தும் அதை உதாசீனப்படுத்துவது சரியா?” என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், நிபந்தனையில்லாமல் பணத்தை பெற்று கொண்டு, தம் மீதான வழக்கை முடிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இனியும் ஒரு வழி

இப்போதும் மல்லையாவுக்கு நாடு கடத்தலில் இருந்து தப்பிக்க ஒரு வழி உள்ளது. அதாவது, ஐரோப்பாவின் மனித உரிமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தனது நாடு கடத்தும் திட்டத்தை ஒத்திவைக்க செய்யலாம். தனக்கு நேர்மையான முறையில் விசாரணை நடக்கவில்லை, மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று மல்லையா நடவடிக்கையை நிறுத்தலாம். ஆனாலும், ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை நிரூபிப்பது எளிதானது காரியம் கிடையாது. இதில் மல்லையா வெற்றி பெற மிகக்குறைவான வாய்ப்பு தான் இருக்கிறது. விஜய் மல்லையாவின் வாதம் அனைத்தும் லண்டன் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்தது கணக்கில் கொள்ளப்பட்டால் அது சிக்கலாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.