இந்தியாவில் கொரோனா வைரசினால் புதியதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது.
சென்னை, மும்பை, அகமதாபாத், டெல்லி மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு புள்ளி விபரங்களின்படி, இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கையானது சீனாவை நெருங்கிவருகிறது என்பதை காட்டுகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,967 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை இன்று 80,000 என்ற கடுமையான மைல்கல்லை தாண்டி உள்ளது. தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் டெல்லி மிகப்பெரிய அதிகரிப்பை கண்டுள்ளது. தேசிய தலைநகரில் வியாழக்கிழமை 472 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 81,970 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
சீனாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82,052 ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 100 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்தது. மராட்டியத்தில் வியாழக்கிழமை குறைந்தது 54 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதனால் மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாக உள்ளது. இதுவரையில் 27,920 சிகிச்சையில் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 51,401 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வியாழக்கிழமை 1,600 க்கும் மேற்பட்டோருக்கு புதியதாக பாதிப்பு கண்டறிப்பட்ட நிலையில் மராட்டியத்தில் கொரோனாவினால் பாதிப்பு எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மும்பையில் மட்டும் 14,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 25,000 -க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்ட ஒரே மாநிலம் மராட்டியமாகும். அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 27,524 ஆக உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருந்த குஜராத்தை தமிழகம் முந்தியுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் நேற்று வியாழக்கிழமை புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இருக்கிறது. ஒரு வாரத்தில் முதல் முறையாக தமிழகத்தில் நேற்று 500-க்கும் குறைவான கொரோனா வைரஸ் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளது. மாநிலத்தில் மொத்த கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,674 ஆக உள்ளது. குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9,591 ஆக உள்ளது.
மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33
ஆந்திரா – 2,205
அசாம் – 87
பீகார் – 994
சண்டிகார் – 191
சத்தீஷ்கார் – 60
தாதர் நகர் ஹவேலி – 1
டெல்லி – 7,233
கோவா – 14
குஜராத் – 9,591
அரியானா – 818
இமாச்சலப் பிரதேசம் – 74
ஜம்மு-காஷ்மீர் – 983
ஜார்க்கண்ட் – 197
கர்நாடகா – 987
கேரளா – 560
லடாக் – 43
மத்தியப் பிரதேசம் – 4,426
மகாராஷ்டிரா – 27,524
மணிப்பூர் – 3
மேகாலயா – 13
ஒடிசா – 611
புதுச்சேரி – 13
பஞ்சாப் – 1,925
ராஜஸ்தான் – 4,534
தமிழ்நாடு – 9,764
தெலுங்கானா – 1,414
திரிபுரா – 156
உத்தரகண்ட் – 78
உத்தரபிரதேசம் – 3,902
மேற்கு வங்காளம் – 2,377.