தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது, 66 பேர் உயிரிழப்பு!

Read Time:2 Minute, 26 Second

தமிழகத்தில் நேற்று மேலும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை நேற்று (மே 14) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒரே நாளில் 447 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக அதிகரித்து உள்ளது.

நேற்று ஒரே நாளில் 64 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 26 குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட 45 முதியவர்களும் கொரோனா வைரசால் புதியதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 10 மாவட்டங்களில் சென்னையில்தான் அதிகமான பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் 3 மாத குழந்தை உட்பட 17 குழந்தைகள் மற்றும் 346 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அடுத்தப்படியாக நெல்லையில் கத்தாரில் இருந்து வந்த 2 பேர் உட்பட 16 பேரும், திருவள்ளூரில் 15 பேரும், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 9 பேரும், காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 8 பேரும், கன்னியாகுமரியில் 5 பேரும், பெரம்பலூரில் 4 பேரும், தூத்துக்குடியில் 3 பேரும், கரூரில் 2 பேரும், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 66 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.