கொரோனா வைரஸ் ஒரு போதும் ஒழிந்து போய்விடாமல் நம்மிடத்தில் இருந்து விடக்கூடும்.! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Read Time:4 Minute, 20 Second

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இருப்பினும், மருந்து விவகாரத்தில் முன்னேற்றம் எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே கொரோனா தொற்று தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், உலக சுகாதார அமைப்பின் அவசர பிரிவு இயக்குனர் டாக்டர் மைக் ரேயான் அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட ஒருபோதும் அழிக்க முடியாமல் அப்படியே இருந்து விடக்கூடும் என எச்சரிக்கையை விடுத்து உள்ளார். இக்கூற்றினால், கொரோனா வைரஸ் எப்போது மறையும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடக்கிற மக்களுக்கும், விஞ்ஞானிகளுக்கான எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது

மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று எப்போதுமே மனித சமூகத்தில் இருக்கும் ஒரு வைரசாக மாறி விடக்கூடும். கொரோனா வைரஸ் ஒரு போதும் ஒழிந்து போகாது.

எப்படி எச்.ஐ.வி. வைரஸ் இன்றும் இருந்து வரும் சூழலில் நம்மை பாதுகாத்துக் கொள்ள கட்டுப்பாடுகளுடன் வாழ பழகிக் கொண்டோம். அவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பு நடவடிக்கைகள் அவசியமாகிறது. கொரோனா வைரஸ் எப்போதாவது மறையும் என யாராலும் கணிக்க முடியும் என்று நான் கருதவில்லை.

தற்போது கொரோனாவுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனாக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, அந்த வைரசை தடுக்க பிரமாண்டமான ஒரு முயற்சி அவசியமாகும். தட்டம்மை போன்ற பிற நோய்களுக்கு தடுப்பூசிகள் இன்றும் வழக்கத்தில் உள்ளன. இருப்பினும் அந்நோய்கள் இன்னும் முற்றிலுமாய் அகற்றப்பட்டு விடவில்லை.

உலக நாடுகள் கொரோனா வைரஸ் விவகாரத்தில் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கை சிறப்பாக செயலாற்றுகிறது. அதனை தொடர்வதும் சிக்கல், பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதும் சிக்கலானது.

கொரோனா தொற்றுக்கு எதிராக ஊரடங்கு மிகச்சிறப்பாக செயலாற்றுகிறது என்று கருதுவதும் சரி, ஊரடங்கை தளர்த்துவது மிகச்சிறந்ததாக இருக்கும் என்று கருதுவதும் சரி, ஆனால் இரண்டுமே ஆபத்தானவையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியம் இன்னும் இருக்கிறது. அதற்கான பாதை நம் கைகளில் இருக்கிறது. அதில் எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. நாம் அனைவரும் பங்களிப்பு செய்தால் இந்த தொற்றுநோயை தடுத்து நிறுத்தலாம் என தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரசின் இரண்டாவது அலைகளை சந்திக்காமல், கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான உத்தரவாத வழிகிடையாது. ஒவ்வொரு நாடும் ஊரடங்கில் இருந்து வெவ்வேறு விதமாக வெளியேற விரும்புகின்றன. ஆனால் எந்த நாட்டிலும் இந்த வைரஸ் உச்சகட்ட அளவுக்கு செல்லக்கூடும் என்பதால் அனைத்து நாடுகளும் உஷாராக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் பரிந்துரையாக இருக்கிறது என தெரிவித்து உள்ளார்.