வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அம்பான்’ புயல் எங்கு செல்கிறது…? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விபரம்…!

Read Time:3 Minute, 38 Second

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளது.

இது இன்று மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும். அதன்பின்னர் நாளை புயலாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், தெற்கு வங்காள விரிகுடாவில் நாளை மாலைக்குள் உருவாகும் புயலால் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

அந்தமான், ஒடிசா, வங்காளத்தின் சில பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை ஆய்வு மையம், அம்பான் புயல் பற்றிய எச்சரிக்கையை தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளது. மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடாவிற்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

‘அம்பான்’ புயல் காரணமாக ஒடிசாவில் 12 கடற்கரை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தயாராக இருக்கும் படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில தலைமைச் செயலாளர் அசித் திரிபாதி இது தொடர்பாக கூட்டம் ஒன்றை நடத்தி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். அப்போது அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் குறிப்பாக வடக்கு கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கும் சூழ்நிலைகளை நெருக்கமாக கவனிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

“வடக்கு ஒடிசாவை இந்த புயல் தாக்குமா அல்லது மேற்கு வங்கம் அல்லது வங்கதேசம் நோக்கி நகருமா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனாலும் சாத்தியம் என்பதால் அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவே முன்னெச்சரிக்கையாக 12 மாவட்ட ஆட்சியர்களை அழைத்து தயார் நிலையில் இருக்க ஆலோசித்து உள்ளோம்” என்று ஒடிசா அரசு தெரிவிக்கிறது. ஒடிசா பேரிடர் துரித நடவடிக்கை படை, தேசிய பேரிடர் குழு, தீயணைப்பு வீரர்கள், ஆகியோர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

ஒடிசா அடிக்கடி புயலை சந்திப்பது வழக்கமான ஒன்றகும். அங்கு புயலால் பாதிக்கப்பட்டோருக்கான முகாம்கள் எல்லாம் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. எனவே, புயல் வரும் என்பது உறுதியாகி விட்டால் கடலோர மாவட்டங்களின் ஆபத்தான் பகுதிகளில் வசிப்பவர்களை தங்க வைக்க மாற்று கட்டிடங்களை தயார் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அம்மாநில உத்தரவிட்டுள்ளது.