தென்மேற்குப் பருவமழை கேரளாவில் 4 நாட்கள் தாமதமாக தொடங்க வாய்ப்பு… இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

Read Time:4 Minute, 16 Second

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் நீர் ஆதாரத்தைப் பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக கேரளாவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலக்கட்டமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மழை இந்திய விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானது. நாட்டிற்கு தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழையில் தான் கிடைக்கிறது.

பருவமழை சீராக இருப்பதே விவசாயத்துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது. ஏனெனில் இது சில வயல்களை நேரடியாக குளிர்விப்பதுடன், குளிர்காலத்தில் விதைக்கப்படும் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய உதவும் நீர்த்தேக்கங்களையும் நிரப்புகிறது.

வடகிழக்கு பருவமழையானது பெரும்பாலும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் சில பகுதிகள், ஆந்திரா ஆகியவற்றுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் பெய்யும். தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கும். ஆனால், கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமான தேதிக்கு பதிலாக சற்று தாமதமாக தொடங்கும் என்றே தெரிகிறது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதியில் தொடங்கும் பருவமழை இவ்வாண்டு 4 நாட்கள் தாமதமாக ஜூன் 5-ம் தேதி தொடங்கும். அந்தமான் நிகோபர் தீவுகளில் பருவமழை நாளை (16-ம் தேதி) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக 22-ம் தேதி வருவதற்கு பதிலாக புயல் காரணமாக முன்கூட்டியே அந்தமானில் மழை தொடங்குகிறது. இவ்வாண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும். மராட்டியம், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கார், தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் பருவமழை வழக்கமான தேதிக்கு பதிலாக 3 முதல் 7 நாட்கள் தாமதமாக தொடங்கும். டெல்லியில் ஜூன் 23-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி தொடங்கும்.

வடமேற்கு இந்தியா பகுதிகளில் சற்று முன்கூட்டியே அதாவது ஜூலை 15-ம் தேதிக்கு பதிலாக ஜூலை 8-ம் தேதியே தொடங்கும். அக்டோபர் 15-ம் தேதியிலிருந்து பருவமழை விடைபெற தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தனியார் வானிலை அமைப்பான ‘ஸ்கைமெட்’ வானிலை நிறுவனம் மாறுபட்ட கணிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது, வரும் 28-ம் தேதியே கேரளாவில் தொடங்க வாய்ப்பிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இக்கணிப்பு வழக்கமாக பருவமழை தொடங்கும் ஜூன் 1-ம் தேதிக்கு மேல் 2 நாட்கள் தாமதமாகவோ அல்லது 2 நாட்கள் முன்கூட்டியே தொடங்கலாம் என தெரிவித்து உள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக அந்தமான் பகுதியில் தென்மேற்குப் பருவமழை சற்று முன்கூட்டியே நாளை (16-ம் தேதி)தொடங்கும். ஆனால், கேரளாவில் வழக்கமான தேதியில் அல்லது இரு நாட்கள் முன்கூட்டியே அல்லது தாமதமாகவோ தொடங்கலாம் என தெரிவித்துள்ளது.