விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு விபரம்:-

Read Time:2 Minute, 9 Second

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான துறைக்கான சலுகை உள்ளிட்ட திட்டங்கள் முதலில் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் 2-வது கட்ட சலுகைகளை நேற்று (மே 14) அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்றார்.

நிர்மலா சீதாராமன் பேசுகையில், 3 கோடி சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் 4.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் சிரமப்படாமல் இருக்க கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து வருகிற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. உரிய நேரத்தில் திருப்பி செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

விவசாயிகள் கடன் அட்டையின் மூலம் 2 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். 25 லட்சம் புதிய விவசாயிகள் கடன் அட்டைகள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது மீனவர்கள், கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை ரூ.86 ஆயிரத்து 600 கோடி வேளாண் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.