சீனாவின் உகான் நகரில் மீண்டும் பரவ தொடங்கியது கொரோனா வைரஸ்…! 1 கோடி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது

Read Time:3 Minute, 27 Second

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019 டிசம்பரில் காணப்பட்டது. பின்னர் அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி, மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தற்போது, உலக நாடுகள் கொரோனாவுடன் போராடிவருகிறது. மருந்து இல்லையென்பதால் உயிர் பலி 3 லட்சத்தையும் தாண்டி செல்கிறது. ஆனால், முதலில் பாதிக்கப்பட்ட சீனாவில் மட்டும் பாதிப்பு குறைந்துவிட்டதாக தெரிவித்தது.

வைரஸ் பரவலின் மையப்பகுதியான உகானில் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து ஒரு மாதத்திற்கு மேலாக யாருக்கும் தொற்று இல்லை என தெரிவித்திருந்தது. இதற்கிடையே அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. வாகனங்கள் ஓடியது. பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் உகான் நகரில் வைரஸ் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கடந்த 9-ம் தேதி அங்கு புதியதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் புதியதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வைரசினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. சீனாவில் தற்போது அறிகுறிகள் ஏதும் இல்லாமல் மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்படுவது அதிகரிக்க தொடங்கியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதனால் உகானில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட தொடங்கியுள்ளது என எச்சரிக்கப்பட்டது. இதனையடுத்து அந்நாட்டு சுகாதாரத்துறை “மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். தொற்றிலிருந்து விலகியிருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனையை செய்துக்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டது.

இரண்டாவது கட்டமாக வைரஸ் பரவ தொடங்கியதும் உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீண்டும் கட்டுப்பாட்டு நடவடிக்களை தீவிரப்படுத்தினர். கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியதும் அங்குள்ள மக்கள் அனைவரையும் பரிசோதிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. உகான் நகரில் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் அங்குள்ள 1 கோடி மக்களையும் அடுத்த 10 தினங்களுக்குள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த அம்மாகாண அரசு திட்டமிட்டுள்ளது.

இன்று (மே – 15) உகானில் மக்கள் வரிசையாக நின்று பரிசோதனை செய்து கொள்ள தொடங்கியுள்ளனர். மக்கள் அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது.