உலகிற்கு மற்றொரு துயரம்… கொரோனா தொற்றுடன் ‘MIS-C’ என்ற அபூர்வமான அழற்சி நோயும் குழந்தைகளை தாக்குகிறது!

Read Time:4 Minute, 24 Second

அமெரிக்காவுக்கு மற்றொரு துயரமாக கொரோனா வைரஸ் தொற்றுடன் அழற்சி நோயும் குழந்தைகளை தாக்குகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு புதிய அழற்சி நோயும் தீவிரமாக பரவி வருகிறது. இதில் 3 சிறார்கள் இறந்து உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மக்களை ஆட்டிப்படைக்கிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு இன்னும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரையில் இந்த வைரஸ் தொற்றுக்கு 46 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 308,654 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதில் அமெரிக்கா தான் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு 1,484,285 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 88,507 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனாவுடன் புதிய அழற்சி நோயும் சேர்ந்து பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் உள்ளிட்ட 17 மாகாணங்களில் இந்த தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் கூட குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்று நோயுடன் இணைந்து அழற்சி நோயும் தாக்குவதால் அவதிப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூஸ் கியூமோ செய்தியாளர்களிடம் பேசுகையில், குழந்தைகளுக்கு கொரோனாவுடன் புதிய அழற்சி நோயும் சேர்ந்து கொண்டு தாக்குகிறது என்பது தெரியவந்துள்ளது. இது ஒரு அபூர்வமான அழற்சி நோயாகும். இதனால் நிலைமை மோசமாகிறது. இது குழந்தைகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி மரணமும் ஏற்படுத்துகிறது. MIS-C என்ற நோய் ‘பீடியாட்ரிக் மல்டி சிஸ்டம் இன்பிளமேட்ரி சிண்ட்ரோம்’ என அழைக்கப்படுகிறது.

இது தாக்கி, இதுவரையில் 5 மற்றும் 7 வயதான 2 சிறுவர்கள், 18 வயதான பெண் என 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இப்படி நியூயார்க்கில் மட்டும் 110 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி நியூயார்க் மாகாண பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இதே போன்று மேலும் 16 மாகாணங்களில் இருப்பது தெரியவந்து உள்ளது. இந்நோய் வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும். எனவே, பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், சாப்பிடுவதில் பிரச்சினை ஏற்பட்டால், அடிவயிற்றில் வலி ஏற்பட்டாலோ, வயிற்றுப்போக்கு நேரிட்டாலோ, வாந்தி எடுத்தாலோ, சுவாசிப்பதில் சிக்கல் உண்டானாலோ, தோல் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாடி விட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான இங்கிலாந்திலும் இந்த நோய் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கு முதல் முறையாக ஏப்ரலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அழற்சி நோயால் குழந்தைகளுக்கு காய்ச்சல், அடிவயிற்றுவலி, இதயத்தில் கூட பிரச்சினைகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த நோய் கவாசாகி நோயைப் போன்றது, இது இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது, பெரும்பாலும் குழந்தைகளைத்தான் பாதிக்கிறது என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.