கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு இன்னும் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் கிடையாது – உலக சுகாதார அமைப்பு

Read Time:3 Minute, 35 Second

இன்று உலகையே மிரட்டும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் பல்வேறு நாடுகளில் நடக்கும் நிலையில், ஏற்கனவே பயன்படுத்தப்படும் மருந்து ஏதாவது பயனளிக்குமா என்பதை அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் சிகிச்சை முறையானது ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடுகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு இன்னும் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் கிடையாது என உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக உலகச் சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை (மே 15) செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்து உள்ளார்.

மரியா பேசுகையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் நூற்றுக்கணக்கில் மருத்துவ சோதனைகள் நடந்து வருகின்றன. இம்மருந்துகள் எப்படி வேலை செய்யும் என்பதை தெளிவாக தெரிந்துக்கொள்ள காத்திருக்கிறோம். அதாவது, மருந்து கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பது அல்லது தீவிர நிலைக்கு தொற்று செல்லாமல் எப்படி தடுக்கிறது மற்றும் மரணத்தை தடுக்கிறதா?, பாதுகாப்பானதா? மற்றும் பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்படுமா? என்ற ரீதியில் முடிவுகளை தெரிந்துக்கொள்வதற்கு காத்திருக்கிறோம்.

இப்போதைக்கு உலக சுகாதார அமைப்பு ‘ஒற்றுமை சோதனை’யை அறிமுகம் செய்து உள்ளது. இது சில மருந்துகளை கொண்டு செய்யப்படும் பரிசோதனைகளாகும். இதற்காக 2,500-க்கும் அதிகமான நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். எந்த சிகிச்சை கொரோனா தொற்றை முறியடிப்பதாக அமையும் என்பதைத் தீர்மானிக்க சில காலம் எடுக்கும், இப்போதைக்கு நோய் தொற்றுக்கு என்று அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள், மருந்துகள் எதுவும் கிடையாது.

மருந்துகள் நன்கு பரிசோதைக்கப்படும் நடைமுறை உள்ளது. முதலில் மருந்துகள், சிகிச்சைகள் தீங்கு செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உலக சுகாதார அமைப்பு குறிப்பிடும் ஒற்றுமை சோதனையில் ரெம்டெசிவைர், ஹைட்ராக்சிகுளோரோகுய்ன், லொபினவிர், ரிடோனவிர் மற்றும் லொபினவிர், ரிடோனவிர் சேர்க்கையுடன் இண்டெர்பெரான் பீட்டா 1ஏ ஆகியவற்றை சேர்த்து கொடுக்கப்படுகிறது. இந்த மருந்துகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு வழங்குப்படுவதாகும். மாறாக கொரோனா வைரஸ் தொற்று இருந்து அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.