குரங்குகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெற்றிக்கண்டது கொரோனா தடுப்பு மருந்து…!

Read Time:4 Minute, 50 Second

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை குரங்குகளுக்கு செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டதில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது. இந்த தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகமெங்கும் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளில் நாடுகள், பல்கலைக்கழகங்கள், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. இவ்வகையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் திட்டத்தில் இறங்கியது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்து குரங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்து உள்ளனர். அதில், கொரோனா வைரசை தடுப்பதற்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு நற்செய்தியாக இந்த மருந்தினால் பாதகமான விளைவுகளின் அறிகுறிகள் எதுவும் தெரியவரவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஒரு மருந்தினை கண்டுபிடிக்கும் போது அது மனித உடலுக்கு எந்தஒரு சேதத்தையும் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும். கொரோனா வைரசால் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சேதம் அடைவதை இந்த தடுப்பூசி மருந்து தடுக்கக்கூடியதாக அமையும் என ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்ட குரங்குகளின் மூச்சுக்குழாய் அழற்சி திரவம் மற்றும் சுவாசக்குழாய் திசுக்களில் கொரோனா வைரஸ் குறைந்ததை காண முடிந்தது. அவைகளுக்கு நிமோனியாவும் வரவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதிகளவிலான கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான 6 குரங்குகளுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. பின்னர், அந்த குரங்குகளுக்கு வைரஸ் இல்லை என தெரிய வந்துள்ளது. மற்றும் அவைகளுக்கு எந்தஒரு பக்க விளைவு ஏற்பட்டதற்கு அறிகுறி எதுவும் இல்லை. இதனால், மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகிற தடுப்பூசிக்கான ஊக்கம் அளிக்கிற அறிகுறிகளாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும் இம்மருந்து பயனுள்ளதாக இருக்குமா? என்பதை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்துதான் பார்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையே லண்டன் கிங் கல்லூரியின் மருந்து மருத்துவ பேராசிரியர் டாக்டர் பென்னி வார்ட், குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தி ஆராய்ந்திருப்பது, மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு சோதித்து வருகிற தடுப்பூசி பரிசோதனைக்கு உதவியாக அமைந்து உள்ளது. நேர்மறையான முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்கிறார்.
மேலும், பல்கலைக்கழகத்தின் பேராசிரியை சாரா கில்பர்ட் கூறும்போது, “தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்து மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்து உள்ளார். மேலும், நிச்சயமாக இதை மனிதர்களுக்கு செலுத்தி தரவை பெற வேண்டும். இந்த தடுப்பூசியை பரவலாக பயன்படுத்துவதற்கு முன்பாக இது வேலை செய்கிறது, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை தடுத்து நிறுத்துகிறது என்பதை நாங்கள் நீருபிக்க வேண்டும் என்கிறார்.

இங்கிலாந்தில் மனிதர்களுக்கு இந்த தடுப்பூசி மருந்தை செலுத்தி பார்க்கப்படுகிற சோதனைகளின் முடிவு அடுத்த மாதத்திற்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.