புலம் பெயரும் தொழிலாளர்கள் மூலம் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் உறுதி…!

Read Time:4 Minute, 4 Second

இந்தியாவில் புலம் பெயரும் தொழிலாளர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு மார்ச் 25-ம் தேதி முதல் அமலில் உள்ளது. ஊரடங்கு தொடர்பாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பறிபோனதும் தொழிலாளர்கள் பெரிதும் வேதனைக்கு உள்ளாகினர். வேலையும் இல்லாமல், போக்குவரத்தும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் வேதனையாக கழித்தனர்.

பலர் வேலை செய்யும் இடத்தில் உணவு கிடைக்காத காரணத்தினால் சொந்த ஊருக்குக்கு நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவு நடந்தே செல்கிறார்கள். இதுதொடர்பான செய்திகளும், வேதனை தகவல்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் பத்திரிக்கைகள், செய்தி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. பலர் கொரோனா வைரசுக்கு முன்னால் பசியுடன் போராடும் வேதனையானது இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் இருந்துக்கொண்டே இருக்கிறது.

ஒருபுறம் தொழிலாளர்கள் இடம்பெயர்வதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தாலும், தொழிலாளர்கள் மோசமான நிலையில் சிக்கியிருப்பது அவர்களை இருபுறம் அடிவாங்கும் மத்தளம் போன்று ஆக்கியுள்ளது. அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்தான் தங்களுக்கு பாதுகாப்பாக அமையும் என தெரிவித்து அங்கு செல்லவே விருப்பம் கொள்கிறார்கள். முதலில் சிறப்பு ரெயில்களை இயக்க தயக்கம் காட்டிய அரசு இப்போது ரெயில்களை இயக்குகிறது. ஆனாலும், இந்த வசதியானது எல்லா தொழிலாளர்களுக்கும் கிடைக்காத நிலையே தொடர்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் புலம் பெயரும் தொழிலாளர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் பலரும் பீகார் நோக்கி செல்கிறார்கள். அம்மாநிலத்திற்கு இதுவரை வந்துள்ள 10,385 புலம்பெயர்ந்த தொழிலாளர்களில், 560 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்து உள்ளது.

பீகாருக்குள் வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி அம்மாநில சுகாதாரத்துறை அளித்துள்ள தகவலில், புலம்பெயர்ந்த தொழிலாளார்கள் வருகை மற்றும் தேதியை தொடர்ச்சியாக பகுப்பாய்வு செய்வதில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். பீகாருக்கு இதுவரை மொத்தம் 10,385 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வந்து சேர்ந்து உள்ளனர். கொடிய கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட வசதியின் கீழ் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரது முடிவுகளும் வந்துள்ள நிலையில் அதில் 560 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 1179 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.