தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. தலைநகர் சென்னையில் அதிகப்படியான பாதிப்புக்கள் பதிவாகிவருகிறது.
நேற்று (மே 16) தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் நேற்று 477 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 10 ஆயிரத்து 585 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4 ஆயிரத்து 415 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். நேற்றைய பாதிப்பில் சென்னையில் மட்டும் 332 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 271 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்ததால் கொரோனா பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இதுவரை 51 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் 3 ஆயிரத்து 538 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 38 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 45 முதியவர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 939 பேர் குணம் அடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
வங்கதேசம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 93 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.