இந்தியாவை மிரட்டும் உம்பன் ‘சூப்பர் புயல்…’ 11 லட்சம் மக்கள் வெளியேற்றம்: இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விபரம்:-

Read Time:5 Minute, 13 Second

வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவாகியிருக்கிறது. இந்த புயலுக்கு ‘உம்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. உம்பன் புயல் தற்போது அதிதீவிரம் ஆகி இருக்கிறது. இது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. அதிதீவிரம் அடைந்திருக்கும் உம்பன் புயல் இன்று (மே 18) ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்றும், அதன்பிறகு மேற்கு வங்காளம் அருகே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

உம்பன் புயல் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சூப்பர் புயல்

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள உம்பன் புயல் அதிதீவிரமடைந்து, சூப்பர் புயலாக இன்று மாறி ஒடிசா கடற்பகுதியில் பலத்த கற்றையும், கடும் மழையையும் கொடுக்கும். மணிக்கு 185 கிமீ வேக காற்றுடன் மேற்கு வங்கம், வங்கதேச கடற்கரைப்பகுதியை நோக்கி செல்லும் புயல் 20-ம்தேதி கரை கடக்கும் என தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்ககடல் உருவான உம்பன் புயல் தென்கிழக்காக நகர்ந்து, வடக்கு, மேற்காக 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து சூப்பர் புயலாக மாறக்கூடும். இதனால் சூறைக்காற்றுடன் மழை பெய்யும், வீடுகள், மின்கம்பங்கள், மரங்கள், மின்கோபுரங்கள், தொலை தொடர்பு கோபுரங்கள் போன்றவற்றுக்கு பெரிதும் சேதங்கள் ஏற்படலாம். மற்றும் விவசாய நிலங்களும் பெரும் அளவு பாதிப்பை சந்திக்க நேரிடலாம்.

தற்போது, ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்திலருந்து தெற்காக 790 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திகா நகரிலிருந்து தெற்கு, தென்மேற்காக 940 கி.மீ தொலைவிலும், வங்கதேசத்தின் கேபுபாராவிலிருந்து 1,060 கி.மீ தொலைவிலும் புயல் இருக்கிறது. உம்பன் புயல் வடக்கு வடகிழக்காக மேலும் நகர்ந்து வங்கக்கடலின் வடமேற்கு திசையில் சென்று மேற்கு வங்கம், வங்கதேச கடற்கரையில் 20-ம் தேதி பிற்பகல் அல்லது மாலையில் கரைகடக்கும்.

மேற்கு வங்கத்தின் திகாவிற்கும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும். அப்போது மணிக்கு சராசரியாக 155 கிமீ முதல் 165 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும், அதிகபட்சமாக 185 கி.மீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என தெரிவித்து உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் புயலால் நேரடியாக ஒடிசாவும், மேற்கு வங்காளமும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் வடபகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இப்பகுதியில் நாளையும், நாளை மறுநாளும் கடும் மழையும், காற்றும் இருக்கும். 18-ம் தேதி (இன்று) முதல் ஒடிசாவின் பல்வேறு நகரங்களில் குறிப்பாக கடற்கரை நகரங்களான கஜபதி, கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர், கேந்தர்பாராில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் அச்சம் காரணமாக கடற்கரை ஓரம் வசிக்கும் 11 லட்சம் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஒடிசா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒடிசா மாநில அரசும் மாநில தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்புப்படையினர் தயாராக இருக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், கஞ்சம், கஜபதி, பூரி, ஜகத்சிங்பூர், கேந்தர்பாரா, பத்ராக், பாலசூர், மையூர்பானி, ஜாஜ்பூர், கட்டாக், குர்தா, நயாகார்க் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.