21 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சூப்பர் சுறாவளி புயலை’ எதிர்க்கொள்ள தயாராகும் இந்தியா…!

Read Time:3 Minute, 23 Second

வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவாகியிருக்கிறது. இந்த புயலுக்கு ‘உம்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

உம்பன் புயல் அதிதீவிரமடைந்து, சூப்பர் புயலாக இன்று மாறி ஒடிசா கடற்பகுதியில் பலத்த கற்றையும், கடும் மழையையும் கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

20-ம் தேதி பிற்பகல் அல்லது மாலையில் மேற்கு வங்கத்தின் திகாவிற்கும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் அதிவேக காற்று மற்றும் கனமழை முதல் மிக அதிக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநில அரசுக்கள் புயலை எதிர்க்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. வடக்கு ஒடிசாவிலும், மேற்கு வங்காள கடலோர பகுதியிலும் பலத்த சேதத்தை புயல் ஏற்படுத்தும் என்றே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. கடலோர பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது என உள்ளூர் வட்டார செய்திகள் வெளியாகியுள்ளது.

உம்பன் சூறாவளி புயல் தீவிரமடையக்கூடும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“உம்பன் இப்போது ஒரு ‘சூப்பர் சூறாவளி புயலாகியிருக்கிறது இது ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு ஒரு தீவிரமான பிரச்சினையாகியிருக்கிறது. 1999 இல் இதுபோல் ஒடிசாவில் ஏற்பட்ட ஒரே சூறாவளி புயல் மிகவும் ஆபத்தானதாக அமைந்தது,” என தேசிய பேரிடர் மீட்பு குழு டிஜி எஸ்.என். பிரதான் தெரிவித்து உள்ளார்.

21 ஆண்டுகளுக்கு முன்பு, 1999-ல், சூப்பர் சூறாவளி புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் பெரும் பகுதிகளை நாசமாக்கியது. சூப்பர் சூறாவளி புயல் அப்போது ஏற்படுத்திய பெரும் சேதத்தை சரிசெய்ய ஒடிசாவுக்கு பல மாதங்கள் பிடித்தது. இப்போதும் தகவல் தொடர்பு மற்றும் மின் கம்பங்களை பிடுங்கக்கூடிய புயலில் மாநிலம் பெரும் சேதத்தை சந்திக்கும் என்றே அஞ்சப்படுகிறது. உம்பன் சூறாவளி புயல் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பல இடங்களில் ரெயில் மற்றும் சாலை இணைப்புகளை சீர்குலைக்கலாம் மற்றும் நிற்கும் பயிர்கள், மரங்கள் மற்றும் பழத்தோட்டங்களுக்கு விரிவான சேதத்தை ஏற்படுத்தும் என்ற ஆபத்தான நிலையே உள்ளது. இருமாநில அரசுக்களும், மத்திய அரசும் ஹை அலார்ட்டில் உள்ளன.