“காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்…” பாகிஸ்தான் முகத்தில் கரியை பூசிய தலிபான் இயக்கம்…!

Read Time:6 Minute, 29 Second

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக்கூறி பாகிஸ்தான் முகத்தில் தலிபான் இயக்கம் கரியை பூசியுள்ளது.

உலகையே உலுக்கியெடுத்த 2001 செப்டம்பர் நியூயார்க் தாக்குதல்களை நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அப்போது ஆட்சியில் இருந்த தலீபான்கள் புகலிடம் அளித்தனர். இதனையடுத்து 2001-ம் ஆண்டு, அக்டோபர் 7-ந் தேதி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலீபான்களை தூக்கி எறிந்து, மக்களாட்சியை மலர வைத்தது.

இதனை தொடர்ந்து அங்கு 19 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நிலை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் பெரும் விலை கொடுத்தது. தினந்தோறும் குண்டுவீச்சுகளையும், ஏவுகணை தாக்குதல்களையும், ராக்கெட் வீச்சுகளையும், துப்பாக்கி சூடுகளையும் பார்த்து நிலை குலைந்து போன மக்கள் இனி ஒரு விடியல் வராதா என்று ஏங்கித்தவித்தனர்.

இந்தநிலையில் தான், ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா விரும்பியது. இதையொட்டி தலீபான்களுடன், அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்தியது. பல முறை அந்த பேச்சுவார்த்தை முறிந்து போனது. நீண்ட இழுபறிக்கு பின்னர், கடைசியில் ஒரு வழியாக அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் பிப்ரவரி 29-ம் தேதி (நேற்று) அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் தனக்கும் பங்கிருப்பதாக தன்னை முன்நிறுத்திக்கொள்ள பாகிஸ்தான் மிகவும் பெரும்பாடு பட்டது. அமெரிக்கா பலமுறை செவிட்டில் அடித்தது போன்று நடத்தினாலும், அதனை பெரிதும் எடுத்துக்கொள்ளாலம் நரிவேடம் போட்டது. இந்தியாவிற்கு எதிராக எப்படி பயங்கரவாதிகளை காய் நகர்த்தியதோ அதேபோன்ற ஆட்டத்தை தான் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்தியது. ஆப்கானிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்தது.

இதற்கிடையே போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ அரசியல் ரீதியாக ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா, அங்கு உள்கட்டமைப்புகளையும் ஏற்படுத்தியது. ஆனால், ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் நட்பு பாராட்டுவதை தடுக்க தலிபான்கள் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் என பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைந்தால் தங்களுக்கு சாதகமாக அமையும் என்பதே பாகிஸ்தான் திட்டமாகும்.

இப்போது இவ்விவகாரம் எழ காரணம் சமீபத்தில், தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாகித் சமூக வலைதளத்தில் “காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் இந்தியாவுடன் நட்புறவு கொள்ள முடியாது. காபூலில் அதிகாரத்தை கைப்பற்றியதும் காஷ்மீரின் அதிகாரத்தையும் கைப்பற்றுவோம்,” என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் கொண்டாட்டம் காணப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் முகத்தில் கரியை பூசும் விதமாக, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தலிபான் இயக்கம் கூறியுள்ளது.

“காஷ்மீரில் ஜிஹாத்தில் தலிபான் சேருவது குறித்து ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை தவறானது…. இஸ்லாமிய அமீரகத்தின் கொள்கை மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாது என்பதை தெளிவுப்படுத்துகிறோம். ” என தலிபானின் அரசியல் பிரிவு ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் இணைக்க வேண்டாம் என பாகிஸ்தானுக்கு ஏற்கனவே தலிபான்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் 2019 ஆகஸ்டில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் -நவாஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஷென்பாஸ் ஷெரீப் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில், ஆப்கானிஸ்தானில்கூட மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். காபூலில்கூட அமைதி நிலவுகிறது. ஆனால், காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது. நாம் என்ன மாதிரியான ஒப்பந்தத்தை செய்திருக்கிறோம் என்றார். இதற்கு தலிபான் அமைப்பு எதிர்ப்பை தெரிவித்தது.

அப்போது தலிபான் பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானில் சில கட்சிகள் ஆப்கானிஸ்தானுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசுகிறார்கள். இது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் காஷ்மீருக்கு தொடர்பில்லாதது. இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியை நடத்தும் மேடையாக ஆப்கானிஸ்தானை மாற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.