ஊரடங்கு 4.0 இன்று தொடங்கியது: எதற்கெல்லாம் அனுமதி…? மத்திய அரசின் புதிய விதிமுறைகள் விபரம்:-

Read Time:8 Minute, 49 Second

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் அதனை கட்டுப்படுத்தும் விதமாக முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனாவின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது எந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் அளவை அடையாளம் காணும் வகையிலாக மாவட்டங்களை சிவப்பு மண்டலங்கள், ஆரஞ்சு மண்டலங்கள் மற்றும் பசுமை மண்டலங்களாக நிர்ணயம் செய்வது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. இவ்வாறு நிறங்கள் அடிப்படையில் மண்டலங்களை வரையறையை நிர்ணயம் செய்வது தொடர்பாக தங்களுடன் ஆலோசனையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என பல மாநில முதல்-அமைச்சர்கள் முதலமைச்சர்கள் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டினர். இந்நிலையில், மாநில அரசுக்களே அவற்றை வகைப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு 4.0-ல் அனுமதிக்கப்பட்ட புதிய செயல்பாடுகள் யாவை?.

மாநிலங்களுக்குள் பயணிகள் வாகனங்கள் மற்றும் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிலையை அறிந்து அனுமதியை வழங்கும்.


மாநிலங்களுக்கு இடையேயும் பயணிகள் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுகிறது. இதிலும், அம்மாநில அரசுக்களின் ஒப்புதல் அவசியமாகும்.


மே 18-ம் தேதி முதல் அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்படும். இருப்பினும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் மால்களில் உள்ள கடைகள் தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும்.


விளையாட்டு வளாகங்கள் மற்றும் ஸ்டேடியாக்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், பார்வையாளர்களுக்கு எல்லை வரையறுக்கப்பட்டது.


எல்லா கடைகளும் திறக்க அனுமதிக்கப்படுகிறதா…? முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் கூட திறக்க அனுமதியா….?

முடிதிருத்தும் கடைகள், அழகு நிலையங்கள், தையல் கடைகள் அனைத்தும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. சந்தைகளில் உள்ள கடைகள், முன்னதாக அத்தியாவசியமற்றவை என வகைப்படுத்தப்பட்டவை ஸ்டேஷனரி கடைகள், புத்தக கடைகள், ஆயத்த துணிக்கடைகள் போன்ற அனைத்தும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இருப்பினும், இதுபோன்ற கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா? என்பதை மாநில அரசுகள்தான் தீர்மானிக்க வேண்டும்.


மாநிலங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்படுவதால், எனது பெற்றோரை சந்திக்க ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லலாமா…?

மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளது. ஆனால், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான அல்லது மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை அனுமதிக்க முடியுமா என்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்ய வேண்டும்.


ஈ-காமர்ஸ் இணையதளங்களில் அத்தியாவசிய பொருட்களில் இடம்பெறாத பொருட்களை ஆர்டர் செய்யலாமா…?

ஆம், ஈ-காமர்ஸ் இணையதளங்கள் மே 18-ம் தேதி முதல் அத்தியாவசியமற்ற பொருட்கள் பட்டியலில் இடம்பெற்ற பெற்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. தொலைக்காட்சி பெட்டி, ஆயத்த உடைகள், மொபைல் சாதனங்கள், மடிக்கணினிகள், பொம்மைகள், பைகள் மற்றும் சாமான்கள், பிற வீட்டு உபகரணங்கள் போன்ற பொருட்களை இப்போது ஆன்-லைனில் வாங்கலாம்.


டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கம் பற்றிய நிலவரம் என்ன…? அவை சிவப்பு மண்டல மாவட்டங்களில் அனுமதிக்கப்படுமா…?

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் டாக்சிகள் அல்லது ஆட்டோக்கள் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு குறிப்பாக எந்தஒரு தடையையும் விதிக்கவில்லை. இருப்பினும், மாநில அரசுகள் ஓலா மற்றும் உபெர் போன்ற டாக்சி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மீண்டும் சேவையை தொடங்க அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சிவப்பு மண்டலங்களில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.


நான் ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கிறேன். இங்கு ஊரடங்கு தளர்வு அனுமதிக்கப்படுமா…?

கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில், அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மருத்துவ அவசரநிலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்படும். இந்த மண்டலங்களில் மக்கள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்த கடுமையான கட்டுப்பாடு இருக்கும்.


நாடு முழுவதும் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் யாவை…?

அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு தடை தொடர்கிறது. உள்நாட்டு மருத்துவ சேவைகள், உள்நாட்டு விமான ஆம்புலன்ஸ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு நோக்கங்களுக்கான நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.


மெட்ரோ ரெயில் சேவைகளுக்கு தடை தொடரும்.


பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் போன்றவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். ஆன்-லைன் கல்வி அல்லது தொலைதூரக்கல்வி தொடர்ந்து அனுமதிக்கப்படும் மற்றும் ஊக்குவிக்கப்படும்.


அனைத்து சினிமா அரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள், அரங்குகள் மற்றும் இதுபோன்ற இடஙக்ளுக்கு தடை தொடரும். விளையாட்டு வளாகங்கள் மற்றும் ஸ்டேடியாக்கள் திறக்க அனுமதிக்கப்படும்; இருப்பினும், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத செயல்பாடுகள், பிற கூட்டங்களுக்கு தடை தொடரும்.


அனைத்து மத வழிப்பாட்டு இடங்களுக்கும் பொதுமக்கள் வருவதற்கு தடை தொடரும். மத சபைகள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.


இரவு 7 மணிக்குப் பிறகு நான் என் வீட்டை விட்டு வெளியேற முடியுமா? அல்லது இரவுநேர ஊரடங்கு உத்தரவு இன்னும் நீடிக்கிறதா…?

அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, தனிநபர்களின் நடமாட்டம் இரவு 7:00 மணி முதல் காலை 7:00 மணி வரை கண்டிப்பாக தடைசெய்யப்படும். உள்ளூர் அதிகாரிகள் தங்களது அதிகார வரம்பின் முழுப் பகுதியிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவுகள் [ஊரடங்கு உத்தரவு] போன்ற பொருத்தமான சட்ட விதிகளின் கீழ் உத்தரவுகளை பிறப்பிப்பார்கள், மேலும் கடுமையான இணக்கத்தையும் உறுதி செய்வார்கள்.