இந்தியாவில் டிக்-டாக்கை தடை செய்ய வலியுறுத்தல்… பிரச்சினையை ஏற்படுத்திய ‘ஆசிட் வீசுவதை ஊக்குவிக்கும்’ வகையிலான வீடியோ..!

Read Time:2 Minute, 51 Second

சீனா நிறுவனத்தால் ‘டிக்-டாக்’ என்னும் செயலி 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 75 மொழிகளில் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்துவதாக தெரியவந்தது.

இந்த செயலியை இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்படுத்துகிறார்கள்.

‘டிக்-டாக்’ செயலி காரணமாக பல விபரீத சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது, இதனால் தமிழக அரசு டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்தது. இச்செயலி இந்தியர்களின் தகவல் தரவுகள் கேள்விக்குறியதாகியுள்ளது என வழக்குகளும் தொடரப்பட்டது.

இந்நிலையில் ‘பைசல் சித்திக்‘ என்பவருக்கு டிக்டாக்கில் 13.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருக்கின்றார்கள். அவர் டிக்-டாக்கில் பெண்கள் மீது ஆசிட் வீசுவதை ஊக்குவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் என குற்றம் எழுந்தது. அந்த வீடியோவும் வைரலாக பரவியது.

அவருடைய வீடியோவை டுவிட்டரில் டிரண்ட் செய்த பலரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தை பலரும் ‘டுவிட்டரில்’ #BanTiktok என்ற ஹேஷ்டக்கில் பதிவு செய்து இந்திய அளவில் டிரண்ட் ஆக்கி வருகிறார்கள் .

நீக்கப்பட்டது

ஒரு பெண்ணின் மீது ஆசிட் வீசுவதாக சித்தரிக்கும் வீடியோவை எப்படி நகைச்சுவையாக எடுக்க முடிகிறது என்ற கேள்வியையும் பலரும் எழுப்பியுள்ளனர். பலரும் அவருடைய செயலை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனையடுத்து தேசிய மகளிர் ஆணையம், மராட்டிய மாநில போலீஸ் கமிஷ்னருக்கும், டிக்டாக் நிறுவனத்திற்கும் கடிதம் எழுதியது. உடனடியாக சம்பந்தப்பட்ட வீடியோ டிக்டாக்கில் நீக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பைசல் சித்திக் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யாரையும் காயப்படுத்துவது என்னுடைய நோக்கம் கிடையாது. எனது பொறுப்பை நான் உணர்ந்து, வீடியோவால் புண்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.