கொரோனா தடுப்பு மருந்தாக அஸ்வகந்தா மூலிகை பலனளிக்கும்… நம்பிக்கையளிக்கும் ஆராய்ச்சி முடிவு..!

Read Time:3 Minute, 50 Second

கொரோனா தடுப்பு மருந்தாக அஸ்வகந்தா மூலிகை பலனளிக்கும் என டெல்லி ஐஐடி(IIT-Delhi) மற்றும் ஜப்பானின் நவீன தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவனம்(AIST) இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகிறது. வைரசுக்கு எதிரான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்து தயாரிக்கும் பணியில் உலக நாடுகள், மருந்து நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்தியாவில் மருந்து தயாரிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே பாரம்பரிய மூலிகைகளும் பயனளிக்குமா? என்பது தொடர்பாகவும் ஆய்வுகள் தொடர்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தாக அஸ்வகந்தா மூலிகை பலனளிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாகவும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தாகவும் அஸ்வகந்தா மூலிகை இருக்கும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐஐடி(IIT-Delhi) மற்றும் ஜப்பானின் நவீன தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவனம்(AIST) ஆகியவை கூட்டாக மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.

இதுபற்றி டெல்லி ஐஐடியின் உயிரிதொழில்நுட்ப துறை தலைவர் டி.சுந்தர் பேசுகையில், அஸ்வகந்தா மற்றும் தேனீக்கள் தயாரிக்க கூடிய பிசின் ஆகியவற்றின் சேர்மானம் கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக பயன்படக்கூடிய திறனை கொண்டிருக்கிறது என தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக ஆய்வக மற்றும் மருத்துவமனை ரீதியிலான மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்த கண்டுபிடிப்பானது கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு ஆகும் நேரம் மற்றும் செலவை குறைப்பதற்கு உதவிகரமாக அமையும். அத்துடன், கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்தாகவும் இது பயன்படலாம்.

இந்த சேர்மானத்தை மருந்தாக தயாரிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும். இது எளிதாக, குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதாக இருந்தாலும், அவற்றின் இயற்கை அடிப்படையிலான தன்மைகள் சற்று வீரியமானவை என்பதால் மிகுந்த எச்சரிக்கையும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசின் மேல் புரத்தில் முட்கள் போன்றிக்கும் புதரத்தை தாக்கும் தன்மையை இம்மருந்து கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆயுஷ் அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.