ரஷியாவில் கொரோனா பாதிப்பு அதிவேகம் எடுக்கிறது… உலக அளவில் 2-ம் இடம்.. !

Read Time:1 Minute, 47 Second

கொரோனா உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன்பிடியில் வல்லரசு நாடுகளும் சிக்கி தவித்து வருகின்றன. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,50,294 ஆகவும், உயிரிழப்பு 91,981 ஆகவும் உள்ளது.

இதனையடுத்து இரண்டாம் இடத்தை ரஷியா பிடித்துள்ளது. ரஷியா கொரோனாவை ஆரம்பக்கட்டத்தில் வலுவாக கட்டுப்படுத்தியது. ஆனால் படிப்படியாக ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளை தாண்டி, ரஷியா இந்த நிலையை எட்டியுள்ளது. கடந்த ஒருவாரத்திற்கு மேலாக அங்கு கொரோனாவினால் தினசரி பதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையானது 10 ஆயிரத்தை எட்டிய வண்ணமே உள்ளது. ரஷியாவில் புதிதாக 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில் 4 ஆயிரம் பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 678 ஆக உயர்ந்து உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் போன்று ரஷியாவில் மாஸ்கோவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ரஷியாவில், கொரோனாவுக்கு நேற்று 91 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 70 ஆயிரத்து 209 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.