கொரோனா தாக்கினால் நீரிழிவு நோயாளிகள் பலியாக கூடுதல் வாய்ப்பு…!

Read Time:3 Minute, 4 Second

கொரோனா தாக்கினால், நீரிழிவு நோயாளிகள் மரணமடையும் வாய்ப்பு மற்றவர்களை விட 50 சதவீதம் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துவிட்டது. உலகம் முழுவதும் வைரசினால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே பிற நோயினால் வாடியவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் உயிரிழந்தவர்களில் 70 சதவீதம்பேர், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, இதய பிரச்சினை ஆகியவற்றில் ஏதேனும் இருந்தவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

இந்நிலையில் கொரோனா தாக்கினால், நீரிழிவு நோயாளிகள் மரணமடையும் வாய்ப்பு மற்றவர்களை விட 50 சதவீதம் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பி துறை தலைவரும், பேராசிரியருமான டாக்டர் நிகில் டாண்டன் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கினால், நீரிழிவு இல்லாதவர்களை விட நீரிழிவு இருப்பவர்கள் பலியாவதற்கு 50 சதவீதம்வரை அதிக வாய்ப்பு இருக்கிறது.

உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்சினை, புற்றுநோய், சிறுநீரக கோளாறு ஆகிய நோய் கொண்டவர்களுக்கும் ஆபத்து அதிகம்தான். எனவே, நீரிழிவு நோய் இருப்பவர்கள், வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தங்கள் ரத்த சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்தை பராமரித்துவர வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியாக உட்கொள்ள வேண்டும். வீட்டிலேயே உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை அமைந்து, மனநலமும், உடல்நலமும் சீராகும் என தெரிவித்து உள்ளார்.

நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதுதான், கொரோனா தடுப்புக்கு முதலாவது முன்னெச்சரிக்கை வழிமுறை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்க்கரை அதிகமாக இருந்தால், அதை வேகமாக கட்டுப்படுத்த இன்சுலின் பயன்படுத்த வேண்டும். அதற்கு தயங்கக்கூடாது. டைப் 1, டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின்தான் சிறந்த மருந்து எனவும் குறிப்பிடுகின்றனர்.