இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது… இதில் மே மாதம் மட்டும் 67 சதவீத பாதிப்பு பதிவாகியுள்ளது…!

Read Time:2 Minute, 49 Second

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தினந்தோறும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்தில் 5,242 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியது. இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவிலும் வேகம் எடுக்கிறது.

வைரஸ் பரவுவதை தடுக்க ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட 3-ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், நேற்று 4-ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஆனாலும் கொரோனா தனக்கு எதிராக போடப்படும் அத்தனை தடைகளையும் தகர்த்து எறிந்துவிட்டு, பலரையும் தாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் (மே 17) 5,242 பேரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிபரம் தெரிவித்தது.

இந்தியாவில் நேற்று (மே 18) காலையில் இருந்து இன்று காலை 8 மணி வரையில் பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரங்களில் 4,970 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 134 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையானது 1,01,139 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 3163 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 58,802 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும் 39,173 பேர் குணம் அடைந்து உள்ளனர் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மே மாதத்தில் மட்டுமே கொரோனா வைரைசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது என்பது தெரிகிறது. அதாவது கடந்த 18 நாட்களில் மட்டும் மொத்த பாதிப்பில் 67 சதவீத பாதிப்பு நேரிட்டுள்ளது. ஏப்ரல் இறுதியில் இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,610 ஆக இருந்தது. இப்போது, 67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.