கொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்!

Read Time:3 Minute, 22 Second

கொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் உள்ள உகான் நகரில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவி மனிதர்களின் உயிரை குடிக்க தொடங்கியது. கடந்த ஆண்டின் இறுதியில் அங்கு இந்த வைரஸ் தோன்றியதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. ஆனால், கடந்த செப்டம்பர் மாதமே அங்கு வைரஸ் தோன்றியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இப்போது கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி ஏராளமானவர்களை காவு வாங்கி வருகிறது. இதற்கு முடிவு எப்போது…? என்று தெரியாத நிலையில், கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாக போராடுகின்றன. ஆனால் கொரோனாவின் கையே ஓங்கியிருக்கிறது.

உகானில் உள்ள ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக சீனா மீது அமெரிக்கா ஏற்கனவே குற்றம்சாட்டியது. ஆனால், இதனை சீனா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு பற்றிய சரியான தகவல்களை வெளியிடாமல் சீனா மறைப்பதாகவும் அமெரிக்கா கூறிவருகிறது.

தற்போதைய நிலவரப்படி தங்கள் நாட்டில் கொரோனாவால் 82,960 பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 4,634 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. சீனாவைவிடவும் 12 நாடுகள் அதிகமான பாதிப்பை கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தேசிய ராணுவ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவர தகவல்கள் ரகசியமான கசிந்து உள்ளன. அந்த தகவல்களை நிபுணர்கள் ஆய்வு செய்ததன் மூலம், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பு பற்றிய உண்மைகளை சீனா மறைப்பதாக கருதப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் இருந்து ரகசியமாக கசிந்த தகவல்களை நிபுணர்கள் ஆய்வு செய்தபோது கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சீனா முழுவதும் உள்ள 230 நகரங்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், குடியிருப்பு வளாகங்கள், ஓட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், உணவு விடுதிகள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டு இருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் பெயர் விவரங்கள் இல்லாமல் வெறும் எண்ணிக்கை மட்டுமே இருப்பதால், ஒரு நபரே பலமுறை பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.