விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை நிறுத்தும் மத்திய அரசின் யோசனைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு.!

Read Time:6 Minute, 36 Second
Page Visited: 228
விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை நிறுத்தும் மத்திய அரசின் யோசனைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு.!

விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் மத்திய அரசின் யோசனைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், ஐந்துவித பொருளாதார நிவாரண தொகுப்பை அறிவித்த தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க இது உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், மாவட்ட மருத்துவமனைகளில் தொற்று நோய்கள் பிரிவுகள் ஏற்படுத்துதல், வட்டார அளவில் பொது சுகாதார பரிசோதனைக் கூடங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, அதில் முக்கிய அம்சங்களாகும்.

இது சில பிரிவுகளுக்கு பயனுள்ளதாக அமைந்திருப்பதை வரவேற்கும் அதே நேரத்தில், மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெறும் வரம்பில் தேவையில்லாத கடுமையான நிபந்தனைகளை அங்கீகரித்திருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். கொரோனா பரவலால் உத்தரவிடப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய வருவாய் வீழ்ச்சியின் நிமித்தம், கூடுதல் கடன் வாங்கும் வரம்பை ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி.) 3 சதவீதத்துக்கும் மேலாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியது.

மாநில அரசுக்கு மிகப்பெரிய அளவிலான செலவுகள் உள்ளன. மாநில அரசுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வரி வருவாயை வைத்து, திரும்ப செலுத்துவதற்கு ஏற்ற கடனை பெற வேண்டியதுள்ளது. அவையெல்லாம் மத்திய அரசிடம் இருந்து வரும் மானியங்கள் அல்ல.

எனவே கூடுதல் கடன்வாங்கு தேவைகளுக்காக தேவையில்லாத கட்டுப்பாடுகளை வைப்பது காரணமில்லாததாகவே தெரிகிறது. மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து எழுவதற்கு முன்பு, ஒரு சீர்திருத்த திட்டத்தை வலுக்கட்டாயமாக திணிப்பது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு உகந்தது அல்ல.

முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தத் திட்டத்தை மாநிலங்களிடம் விரிவாக கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் நிலைமையின் அடிப்படையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த சீர்திருத்தங்களை கொரோனாவுக்கான மத்திய சிறப்பு மானியத்துடன் இணைத்திருக்க வேண்டுமே தவிர, மாநில அரசுகள் பெறும் கூடுதல் கடனுடன் இணைக்கக் கூடாது.

அரசியல் சாசனத்தின் 293(3)-ம் பிரிவுடன் மத்திய அரசின் அதிகாரத்தை இணைத்து, கூடுதல் கடன் வாங்கும் மாநிலங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது இதுவரை நடந்திராத ஒன்று.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கூடுதல் கடன் பெற்று சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய 4 பெரிய அம்சங்களில், எந்த நிதியுதவியையும் எதிர்பார்க்காமல் மாநில அரசே சீர்திருத்தங்களை செய்திருக்கிறது. மின்சார பகிர்வுக்கான சீர்திருத்தங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

விவசாயத்துக்கு இலவச மின்சாரம்

மின்சார சட்டத்தில் கொண்டு வர முன்மொழியப்பட்ட மாற்றங்களில் உள்ள பிரச்சினைகள் பற்றி நான் ஏற்கனவே கருத்து கூறியிருக்கிறேன். விவசாயிகளுக்கு அளிக்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் யோசனையை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது.

மானியங்களை தள்ளுபடி செய்யும் முறைகள், மாநில அரசுகளிடமே விடப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடாகும். எனவே இந்த பிரச்சினையில் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், மின்சார பிரிவில் கட்டுப்பாடுகளுடன் கொண்டு வரப்படும் சீர்த்திருத்தத்தின் தேவைகளை நீக்கும்படி சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.

சீர்த்திருத்தத் திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மோசமான நிதிச்சிக்கல் இருக்கும் சூழலில் கடன் பெறுவதற்காக தேவையில்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, முக்கியமான செலவுகளில் தேவைப்படும் நிதியை மாநில அரசினால் பெற முடியாமல் போய்விடும்.

இந்த சூழ்நிலையில் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதை நம்புவதோடு, சம்பந்தப்பட்ட வழிகாட்டியில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சகத்தை அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %