கொரோனா வைரஸ் பரவலை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்ட நவீன மோசடி – சி.பி.ஐ. எச்சரிக்கை

Read Time:2 Minute, 48 Second

கொரோனா வைரஸ் பரவலை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்ட நவீன மோசடி நடப்பதாக சி.பி.ஐ. எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டத்தில் ‘பாங்கிங் ட்ரோஜன் செர்பரஸ்’ என்று அழைக்கப்படும் மென்பொருளை பயன்படுத்தி, வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்தை திருட நவீன தொழில்நுட்ப மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது என சிபிஐ எச்சரிக்கையை விடுத்து உள்ளது.

இந்த மோசடியில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிற வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். எஸ்.எம்.எஸ். செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பை (லிங்க்) பதிவிறக்கம் செய்ய குறிப்பிடுவார்கள். இதனை பதிவிறக்கம் செய்தால், கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கு உங்கள் வங்கி கணக்கில் ஒரு பெரிய தொகை செலுத்தப்படும் என ஆசையை தூண்டும் தகவல் இடம்பெற்றிருக்கும்.

ஆனால், உண்மையில் அது வாடிக்கையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மோசடியான மென்பொருளை இணைப்பதாகும்.

பணத்திற்கு ஆசைப்பட்டு நீங்கள் அதனை பதிவிறக்கம் செய்து விட்டால், அந்த ஸ்மார்ட் போன் கட்டுப்பாடு, எஸ்.எம்.எஸ். அனுப்பிய மோசடி நபரின் கைக்கு சென்று விடும். அதைக் கொண்டு வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு எண், டெபிட் கார்டு எண் உள்ளிட்ட அனைத்து ரகசிய தகவல்களையும் அவர்கள் எளிதாக திருடிவிடலாம். மேலும், வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் அவர்கள் தங்கள் வசப்படுத்த முடியும். தாங்கள் நினைத்ததை சாதிக்கவும் இயலும்.

வங்கியில் பணத்தை சுரண்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு அது வழிநடத்தும்.

சர்வதேச அளவில் இப்போது இந்த மோசடி அரங்கேறி வருவதாக ‘இன்டர்போல்’ (சர்வதேச போலீஸ் அமைப்பு) எச்சரித்து உள்ளது. இதன் அடிப்படையில் மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும், போலீஸ் துறையினரையும் சி.பி.ஐ. உஷார்படுத்தி இருக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் கவர்ச்சியான தகவல்களை நம்பி மோசம் போய்விடாமல் உஷாராக இருக்க வேண்டும்…