உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தையும், சாவு 3 லட்சத்து 25 ஆயிரத்தையும் தாண்டியது…!

Read Time:3 Minute, 46 Second

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி செல்கிறது. அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 93,653 ஆக உயர்ந்து இருக்கிறது.

உலக நாடுகள் அனைத்தையும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கிறது. ஒவ்வொரு நாடும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு உத்திகளை வகுத்து செயல்படுத்தி வந்தாலும் கொரோனாவின் ஆதிக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. மருத்து இல்லாத காரணத்தினால் உலக நாடுகள் கொரோனாவின் முன்னதாக மண்டியிடும் நிலைதான் இருக்கிறது.

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பரில் முதன்முதலாக இந்த வைரஸ் வெளிப்பட்டது. இந்த 5 மாத காலத்தில் அது 200 நாடுகளில் கால் பதித்து விட்டது. வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி செல்கிறது. வைரஸ் பாதிப்பு 5,017,936 ஆக இருக்கிறது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையத்தின் தரவின்படி, சிகிச்சை பலனின்றி இறந்தோர் எண்ணிக்கை 325,625 ஆகும். கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தை வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

இங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,573,073 ஆகும். இங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 93,653 ஆக உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம்தான் 3 லட்சத்து 51 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளை கொண்ட மாகாணமாக இருக்கிறது. இங்கு மட்டுமே 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகளை கொண்ட மாகாணங்களாக நியூஜெர்சி, இல்லினாய்ஸ், மசாசூசெட்ஸ், கலிபோர்னியா, பென்சில்வேனியா, மிச்சிகன் ஆகியவை உள்ளன.

கொரோனா வைரஸ் ஆதிக்கத்துக்கு மத்தியிலும் அமெரிக்காவில் 40-க்கும் மேற்பட்ட மாகாகணங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. ரஷிய நாட்டில் தொடர்ந்து கொரோானா வைரஸ் பரவல் வேகம் எடுத்து வருகிறது. தினமும் ஏறத்தாழ 10 ஆயிரம் பேருக்கு அங்கு புதிதாக இந்த தொற்று பாதித்து வருவது மக்களை அலற வைப்பதாக அமைந்துள்ளது.

அங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 308,705 ஆக இருக்கிறது. பலி எண்ணிக்கை 2,972 ஆக இருக்கிறது. 3 ஆயிரத்தை நோக்கி அந்த எண்ணிக்கை விரைகிறது. இதனையடுத்து 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா நோயாளிகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் (2,61,717), இங்கிலாந்து (2,48,818), ஸ்பெயின் (2,78,188), இத்தாலி (2,26,699) ஆகிய நாடுகள் உள்ளன. பிரான்ஸ் 1 லட்சத்து 79 ஆயிரத்து 927 பேருடனும், ஜெர்மனி 1 லட்சத்து 77 ஆயிரத்துக்கு அதிகமானோருடனும் உள்ளன. இப்பட்டியலில் இந்தியா 11-வது (பாதிப்பு 107,819) இடத்தில் உள்ளது.