தினமும் கொரோனா பரிசோதனை…! மாரடைப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்ட மாத்திரையை விரும்பி சாப்பிடும் டொனால்டு டிரம்ப்…!

Read Time:3 Minute, 46 Second

மாரடைப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்ட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக சாப்பிட்டு வருகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. முதல்கட்டமாக மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் சிகிச்சைக்கு பயனளிப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் இந்த மாத்திரை கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு வேலை செய்வதில்லை. மேலும், நோயாளிகளுக்கு மாரடைப்பை ஏற்படுத்துகிறது. பிற உடல்நல குறைபாடுகளை ஏற்படுத்துகிறது என ஆய்வு தகவல்கள் வெளிவந்தன. மொத்தத்தில் அந்த மாத்திரைகள் பயனளிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் “பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் காட்டப்படவில்லை” என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) கடந்த மாதம் ஒரு எச்சரிக்கையான ஆலோசனையை வெளியிட்டது. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இந்த மருந்து கடுமையான இதய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற ஆய்வு அறிக்கையை அது மேற்கோளிட்டுள்ளது. இருப்பினும், டிரம்ப் இந்த மாத்திரை பயனளிக்கும் என நம்புகிறார்.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், கொரோனா வைரஸ்களை தடுப்பதற்கு பயனுள்ளவையாக இருக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பேட்ரிஸ் ஹாரிஸ் தெரிவித்து உள்ளார். பெரிய அளவில் நடத்தப்பட்ட இரு ஆய்விலும் மாத்திரை பயனளிக்கவில்லை, மாறாக இதய பிரச்சினையை ஏற்படுத்துகிறது என தெரியவந்தது.

இதற்கிடையே வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அதிகாரிகள் சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டிரம்புக்கு தினசரி கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஒன்றரை வார காலமாக தினமும் எடுத்து வருகிறேன். இத்துடன் துத்தநாக சப்ளிமென்டும் எடுத்துக்கொள்கிறேன்.

என்னை இந்த மருந்துகள் எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்யவில்லை. ஆனால் இந்த மாத்திரைகளை வழங்குமாறு வெள்ளை மாளிகை டாக்டரை நானே கேட்டுக்கொண்டேன். சாப்பிடவும் செய்கிறேன். இது நல்லது என்று கருதித்தான் சாப்பிடுகிறேன். இந்த மாத்திரை பற்றி பல நல்ல தகவல்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மாத்திரைகளை எடுத்துக்கொண்டு நன்றாகத்தான் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். மாத்திரைகள் மீதான எச்சரிக்கைகள் தகவல்களை உதாசீனப்படுத்திவிட்டு டிரம்ப் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது.