டிக் டாக் ரேட்டிங்கை 1.3 ஆக குறைத்த இந்தியர்கள்…! ‘ஆசிட் வீச்சை ஆதரிக்கும்’ வீடியோவை வெளியிட்ட பைஸல் கணக்கை நீக்கியது டிக் டாக்…!

Read Time:3 Minute, 45 Second

‘டிக்-டாக்’ செயலி காரணமாக பல விபரீத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

பாலியல் தொடர்பான மோசமான தகவல்கள் மற்றும் ஆபாசமான செய்கைகள் அடங்கிய வீடியோக்களால் டிக் டாக் செயலி மீது புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

சீன நிறுவனமான டிக் டாக் இந்தியர்களின் தகவல்களை திருடுவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், டிக்டாக்கை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக கோரிக்கை வலுத்து வருகிறது. #BanTiktok என்ற ஹேஷ்டக்கில் பதிவு செய்து இந்திய அளவில் டிரண்ட் செய்யப்பட்டது.

பைஸல் சித்திக் என்பவர் டிக் டாக்கில் மிகப் பிரபலானவர். இவரை டிக் டாக்கில் 1.34 கோடி பயனர்கள் பின்தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் வெளிட்ட வீடியோவில், ஒரு பெண்ணின் மீது ஆசிட் அடிப்பது போலவும், அதன் பிறகு அந்தப் பெண்ணின் முகம் எப்படி சிதைந்துள்ளது என்பதையும் காட்டும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார்.

வீடியோவில் அந்தப் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுகையில், ‘நீ யாருக்காக என்னை விட்டுச் சென்றாயோ, அவன் உன்னை விட்டுச் சென்றுவிட்டானா?’ என்று பைஸல் சித்திக் கேட்பது போன்று காட்சி இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ காட்சிக்கு பலரும் எதிர்ப்பு பதிவு செய்து இருந்தனர். தேசிய பெண்கள் ஆணையமும் மராட்டிய காவல்துறையிடம் விளக்கம் கோரியது. இதற்கிடையே பைஸல் மன்னிப்பு கோரினார்.

மேலும், கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலியின் ரேட்டிங்கை இந்தியர்கள் சரிவடைய செய்யும் பணியை மேற்கொண்டனர். கடந்த வாரம் டிக்டாக் செயலியின் ரேட்டிங் 4.9 ஆக இருந்தது. அதுவே, தற்போது 1.3 ஆக குறைக்கப்பட்டுவிட்டது. டிக்டாக்கில் வெளியான பல்வேறு ஆபாச செய்கை விடியோக்களை வைரலாகி ஏன் தடை செய்யப்படக்கூடாது? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வீடியோவை வெளியிட்ட பைஸல் சித்திக்கின் கணக்கை டிக் டாக் நிறுவனம் நீக்கியுள்ளது. இது குறித்து டிக்-டாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில்,

டிக்-டாக்கில் மக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்குகிறோம். அதை எங்கள் விதிமுறை வழிகாட்டுதல்களில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். எங்கள் விதிமுறைகளின்படி அடுத்தவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், உடல்ரீதியான தாக்குதலை ஊக்குவிப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பது, போன்றவற்றை நாங்கள் அனுமதிப்பது கிடையாது.

மேலும் நிர்வாகத்தின் வீடியோ பொறுப்பாளர்கள் விதிமுறைகளை மீறிய அந்த வீடியோவை நீக்கியதுடன் சம்பந்தப்பட்ட நபரின் கணக்கை முடக்கி உள்ளோம். அது மட்டுமின்றி இதற்கான சட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.