மராட்டியத்தில் இருந்து வந்தவர்களால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

Read Time:3 Minute, 47 Second

மராட்டியத்தில் இருந்து வந்தவர்களால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த பலர் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் பாதிக்கப்படுவதை கண்டறிவது சவாலாக மாறியுள்ளது.

தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு மராட்டியத்தில் இருந்து வருபவர்களால் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் 18-ம் தேதி வரையில் 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இவர்களையும் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்து உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 70 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்து உள்ளார். மீதமுள்ள 155 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லையில் இருந்து புதியதாக பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், மராட்டியத்தில் இருந்து வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 50 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 28 பேர் நெல்லை, தென்காசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 18-ம் தேதி வரையில் 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 29 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் இறந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று (மே 19) மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவில்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 60 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.