சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை திருப்பி அழைக்கும் வகையிலான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்…

Read Time:2 Minute, 20 Second

கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்து உள்ளது. டொனால்டு டிரம்ப் அதிபரான பின்னர் சீனாவுடன் ஒரசல் போக்கையே கொண்டிருந்தார். அவ்வப்போது கடுமையான நடவடிக்கையை எடுத்தார். இருநாடுகள் இடையே பொருளாதார மோதல் நேரிட்டது. இந்நிலையில் சீனாவில் தொடங்கிய கொரோனாவால் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டது எனவும் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டுகிறார். இந்நிலையில் சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை அழைத்து வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘அமெரிக்க நிறுவனங்களை தாயகம் கொண்டு வரும் மசோதா’ அமெரிக்க நாடாளுமன்றத்தல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மசோதாவை தாக்கல் செய்துள்ள எம்.பி. மார்க் கிரீன், அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க முதலீடுகளை ஈர்ப்பது அவசியமாகிறது. அமெரிக்க நிறுவனங்கள், சீனாவில் இருந்து இடம் பெயருவதற்கு செலவு தான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. சர்வதேச ரீதியாக, பொருளாதார நிச்சயமற்ற நிலைமையால், நாடு விட்டு நாடு செல்வது அதிக ஆபத்தும், அதிக செலவும் நிறைந்தது என்பதால் நிறைய நிறுவனங்களுக்கு தயக்கமாக இருக்கிறது.

சீனா, நம்பகத்தன்மையற்ற கூட்டாளி என்பதை நிரூபித்து விட்டது. எனவே, அமெரிக்கா மீண்டும் வளர்வதற்கும், சீனாவை சார்ந்து இருப்பதை தவிர்ப்பதற்கும் வாய்ப்புகளுக்கு கதவை திறந்து வைப்பது மிகவும் நல்லதாக அமையும். சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் இடம் பெயர்வதற்கான செலவுகளுக்காக ஊக்கத்தொகை அளிப்போம், இம்மசோதா அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ஏற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.