மும்பையில் கொரோனா வைரஸ் ஊரடங்கை முழுமையாக ஒழுங்குப்படுத்த மத்திய போலீஸ் படை கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளது.
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் கடந்த 20 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கடந்த 3 நாட்களாக தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4-வது நாளாக நேற்றும் மாநிலத்தில் 2,250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மராட்டியத்தில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39 ஆயிரத்து 297 ஆக அதிகரித்து உள்ளது. அங்கு கிட்டத்தட்ட பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதேபோல மேலும் 65 பேர் மாநிலத்தில் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதனால், மாநிலத்தில் வைரஸ் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,390 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பையை பொறுத்தவரை நேற்று புதிதாக 1,372 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் நிதி தலை நகரில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்து 935 ஆக அதிகரித்து உள்ளது. அங்கு மடுட்மே கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 841 ஆக அதிகரித்து உள்ளது. மராட்டியத்தில் ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகி வருகிறது.
மராட்டியத்தில் கொரோனா பெருந்தொற்று கொர தாண்டவமாடி வருகிறது. மராட்டியத்தில் இந்த மாத இறுதியிலும், அடுத்த மாதத்திலும் (ஜூன்) நோய் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது என மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மும்பையில் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கும் வகையில் பாதுகாப்பு படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய தொழில பாதுகாப்பு படையை சேர்ந்த (சிஐஎஸ்எப்) 5 குழுக்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. மும்பைக்கு திங்கள் கிழமை வந்த படை வீரர்கள் தராவி உள்பட கொரோனா வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆயுதங்கள்,கேடயங்களுடன் ஆயுதம் ஏந்திய சிஐஎஸ்எப் படை வீரர்கள் புதன்கிழமை (மே 20) இரவு பெண்டி பஜார் பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.
மும்பையில் இதுவரையில் 700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 10 பேர் இந்த நோயால் இதுவரை இறந்துள்ளனர். தற்போது மத்தியப் படைகளை நிலைநிறுத்துவதன் மூலம், மும்பை போலீசாருக்கு கடமைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும்.
சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதிலும், ஊரடங்கு காலத்தில் நகரத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பதற்கும் மும்பை காவல்துறைக்கு மத்திய படைகள் உதவும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.