கொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்த சிறுமி…!

Read Time:7 Minute, 15 Second

கொரோனா வைரஸ் ஊரடங்கு! இந்தியாவில் அடிப்படை கூலி தொழிலாளர்கள் நிலையானது மிகவும் மோசமாகியிருக்கிறது. கையில் பணம் இல்லாமல், வேலை இனி கிடைக்குமா என்ற கேள்வியுடன் உயிருடன் இருந்தால் போதும் என மக்கள் சாரசாரையாக சாலைகளில் நடந்தே சொந்த ஊர்களுக்கு திரும்பினர். மறைமுகமாக பலருடைய வாழ்க்கைப்பாதையையே மாற்றிப்போட்டு விட்டது ஊரடங்கு.

ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் இருப்பதை கொண்டு பலரும் வாழப்பழகி கொண்டு விட்டனர். சோதனை காலத்திலும் சிலர் போராடி சாதனைகள் படைக்கிறார்கள். இந்த வரிசையில் பீகாரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி 15 வயது சிறுமி ஜோதி குமாரி, கொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்துள்ளார். அவருடைய பாசம் மற்றும் வலிமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிறுமி தந்தை மோகன் பஸ்வானுடன் அரியானா மாநிலம் குர்கானில் வசித்து வந்தார். ஆட்டோ டிரைவராக பணியாற்றிய மோகன் பஸ்வான் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தார். மேலும், ஒரு விபத்திலும் சிக்கி காயம் அடைந்தார். அவரிடம் இருந்த ஆட்டோ ரிக்‌ஷாவை அதன் உரிமையாளர் திரும்ப பெற்றுக்கொண்டார். இதனையடுத்து அவர் 1,200 கி.மீ. தொலைவில் பீகாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு திரும்பி அங்கேயே பிழைப்பைத் தேடிக்கொள்வது என முடிவு செய்துள்ளார். இதனையடுத்து கையில் இருந்த பணத்தைக்கொண்டு சைக்கிள் வாங்க முயற்சி செய்துள்ளார்.

தந்தையை சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு, ஜோதி குமாரி கடந்த 10-ம் தேதி குர்கானில் சைக்கிளை மிதிக்க தொடங்கினார். 7 நாட்கள் இரவும், பகலும் தொடர் சவாரிக்கு பின்னர் கடந்த 16-ம் தேதி பீகாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு தந்தையுடன் சென்றடைந்தார். 1,200 கி.மீ. தொலைவுக்கு தனது தந்தையை பின்னால் ஏற்றிக்கொண்டு ஒரு சிறுமி சைக்கிள் ஓட்டி இருக்கிறார் என்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

குர்கானில் மேற்கொண்ட சிரமமே அவரை இந்த வைராக்கியமான பயணத்திற்கு தள்ளியுள்ளது.

இதுதொடர்பாக ஜோதி குமாரி பேசுகையில், ஊரடங்கு தொடங்கியதிலிருந்து நானும் என் தந்தையும் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் எங்களை வெளியேற்ற முயற்சித்தார். வீ்ட்டின் மின்சாரத்தை துண்டித்து பல்வேறு சிரமங்களை கொடுக்க தொடங்கியதால் நாங்கள் சொந்த கிராமம் செல்ல முடிவு செய்தோம். தந்தைக்கு வருமானமும் இல்லை என்பதால் சாப்பிடுவதற்கு உணவும் கிடையாது. இதனையடுத்து சொந்த ஊருக்கு எப்படியாவது செல்ல நினைத்தேன்.

எங்கள் கையிலிருந்த 500 ரூபாயக்கு வீட்டின் அருகே இருப்பவரிடம் ஒரு சைக்கிளை விலைக்கு வாங்கினேன். அவர் ரூ.1500 கேட்டார், என்னுடைய நிலைமையை தெரிவித்து, மீதமுள்ள பணத்தை அனுப்பிவைக்கிறேன் என கூறினேன். பின்னர் அவரும் சம்மதித்தார். ஆனால் என் தந்தையோ என்னுடன் சைக்கிளில் வர மறுத்துவிட்டார். பாதுகாப்பாக இருக்காது என மறுத்தார், அவரை சமாதானம் செய்து என்னுடன் பயணிக்க வைத்தேன். நடக்க முடியாத எனது தந்தையை சைக்கிள் பின்பகுதியில் அமர வைத்து நாள்தோறும சுமார் 100 கி.மீ பயணித்தேன்.

இரவு நேரத்தில் ஏதாவது பெட்ரோல் நிலையத்தில் இருவரும் ஓய்வெடுத்தோம். அங்கிருந்தவர்கள் எங்கள் நிலைமையை அறிந்து உணவு கொடுத்து கவனித்தனர். நான் தந்தையை அழைத்து கொண்டு செல்லும் போது பலரும் என் தந்தையை கிண்டலடித்தார். மகளை சைக்கிள் ஓட்டவைத்து பின்னால் அமர்ந்து செல்கிறாய் வெட்கமாக இல்லையா? என்று கிண்டலடித்தார். என் தந்தை மனவருத்தம் அடைந்த போது அதைப்பற்றி கவலைப்படாதீர்கள் எனக்கூறி நான் தொடர்ந்து சைக்கிள் மிதித்து பீகார் வந்தடைந்தோம்.

மற்றவர்கள் கிண்டல் செய்வதைப்பற்றி நான் கவலைப்படவி்ல்லை. என்னுடைய தந்தையை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய நோக்கமாக இருந்தது. என் தந்தை எங்களுக்காக அடைந்த காயங்கள் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் அவர்களுக்கு அது தெரியாது” என்று கூறியுள்ளார்.

சிறுமி 1200 கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்த செய்தி கேட்டு டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள உள்ள தேசிய சைக்கிளிங் பெடரேசன் அறிந்து அதிர்ந்துபோனது. அதெப்படி ஒரு சிறுமிக்கு இது சாத்தியமாயிற்று என்று வியந்தும் போனது. சிறுமி ஜோதிகுமாரியை அழைத்து அவரது சைக்கிள் ஓட்டும் திறனை சோதித்துப்பார்ப்பது என்று முடிவு செய்திருக்கிறது.

இதுபற்றி இந்த அமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், ஒரு எட்டாம் வகுப்பு மாணவி இதை செய்திருக்கிறார் என்றால் அது வியக்க வைக்கிறது. சிறுமியிடம் அதற்கான வலிமை, உடல்வாகு இருக்கிறது. எங்களிடம் உள்ள கணினிமயமாக்கப்பட்ட சைக்கிளில் அந்த சிறுமியை அமர வைத்து சோதிப்போம். நாங்கள் தேர்ந்தெடுக்கும் 7 அல்லது 8 அம்சங்களில் அவர் தேர்ச்சி பெறுகிறாரா? என்று பார்ப்போம். தேர்ச்சி பெற்று விட்டால், ஜோதிகுமாரி பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்க முடியும். ஏற்கனவே எங்களிடம் 14, 15 வயதில் 10 வீரர்கள் இருக்கிறார்கள். இளம் வீரர்களை நாங்கள் வளர்த்தெடுக்க விரும்புகிறோம் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியுடன் பேசி விட்டோம் எனவும் கூறியுள்ளார்.