கொரோனா பாதிப்புடன் வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

Read Time:3 Minute, 48 Second

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா வைரஸ் பாதிப்புடன் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளவர்களில் 689 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பரிசோதனையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 76 பேருக்கும், கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவரும் என மொத்தம் 79 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்து உள்ளது.

இதனால் தமிழகத்தில் நேற்று கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 776 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 532 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 400 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை இவ்வாறு குணமடைந்து 6 ஆயிரத்து 282 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, திருவாரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக புதிதாக நோய் தொற்று ஏற்படாதபடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அங்கு கட்டுப்பாட்டு பகுதியும் இல்லாத நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களுக்கு வெளிமாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளால் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த பயணிகள் 7 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வீடு திரும்பும் முன்னர் பரிசோதனை செய்யப்படுகின்றனர். அந்த பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு முதலில் பாதிப்பு இல்லாமல், பின்னர் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவது பெரும் சவாலாக உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இருந்து வருகிறவர்களால், தற்போது பெரும் அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்து உள்ளது. இந்தியாவிலேயே மிகக்குறைவாக தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.7 சதவீதமாக உள்ளது. மேலும் உயிரிழப்புகளை தவிர்க்க 12 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.