அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்திய மருத்துவர் உயிரிழப்பு..!

Read Time:4 Minute, 24 Second
Page Visited: 156
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்திய மருத்துவர் உயிரிழப்பு..!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தை வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,620,902 ஆகும். இங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 96,354 ஆகும் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையம் கூறுகிறது.

அமெரிக்காவில் முன் வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவமும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட நியூயார்க் நகரில் உள்ள சவுத் ரிச்மாண்ட் மருத்துவமனையில் உள்மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தவர் இந்திய மருத்துவர் சுதீர் எஸ்.சவுகான். இவர், நியூயார்க் ஜமைக்கா மருத்துவமனையில் உள் மருத்துவ நிபுணராகவும், இணை திட்ட இயக்குனராகவும் செயல்பட்டு வந்தார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்தது கண்டறியப்பட்டது. இதற்காக கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டாக்டர் சுதீர் எஸ்.சவுகான் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்துவிட்டார். இச்செய்தியை அமெரிக்க வாழ் இந்திய டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மருத்துவர் சுதீர் எஸ்.சவுகான், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜிஎஸ்யுஎம் மருத்துவ கல்லூரியில் படித்து 1972-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். பின்னர் அவர் அமெரிக்கா சென்று ஜமைக்கா மருத்துவமனையில் உள்மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து தேறி அங்கேயே பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணம் குறித்து அவரது மகள் சினேஹ் சவுகான், “எனது தந்தை சுதீர் எஸ்.சவுகான் தனித்துவமானவர். கனிவானவர். மென்மையானவர். அவரது மறைவு எங்களை மிகவும் உலுக்கி உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம்தான் நியூயார்க்கில் இந்தியாவை சேர்ந்த தந்தையும், மகளுமான மருத்துவர் சத்யேந்தர் கன்னாவும், மருத்துவர் பிரியா கன்னாவும் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். இதேபோன்று டாக்டர் அஜய் லோதா, அஞ்சனா சமத்தார், சுனில் மெஹ்ரா ஆகியோரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கிற டாக்டர்களுக்கு பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற சுய பாதுகாப்பு கருவிகள் போதுமான அளவுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பாதுகாப்பு கருவிகள் இல்லாததால் மருத்துவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருவதாகவும், சிலர் பலியாகி வருவதாகவும் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கம் கூறுகிறது.

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த 80 ஆயிரம் பேர் மருத்துவர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு முன்நின்று சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %