ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்குகிறது…

Read Time:2 Minute, 10 Second

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து சரக்கு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு நடந்த சென்றனர். இதனால் அரசின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து அவர்களை அழைத்துச் செல்வதற்காக கடந்த 1-ம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில்களுக்கு ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று (மே 22) முதல் இயங்கவும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளருக்கு ரெயில்வே வாரியத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், இன்று (மே 22) முதல் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தந்த மண்டலங்களில் எத்தனை டிக்கெட் கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும் என்பதை முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் முடிவு செய்து கொள்ளவேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் சமூக இடைவெளி விட்டு நிற்கவும், மேலும் சுகாதார விதிமுறைகளையும் கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.