“எஞ்சின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது…” பாகிஸ்தானில் 98 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானியின் கடைசி தகவல்…

Read Time:1 Minute, 57 Second

பாகிஸ்தானின் கராச்சி நகரில் தரையிறங்க முயன்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் A320 Airbus விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள் சிக்கியது.

லாகூரில் இருந்து கராச்சியை நோக்கிய விமானம் இன்று (மே 22) பிற்பகல் 2:30 மணியளவில் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்துள்ளது.

விமானத்தையோட்டிய விமானி சஜ்ஜத் கவுல், விமானத்தை தரையிறக்க முயன்று மூன்று முறை வானிலேயே சுற்றியுள்ளார். அப்போது “விமானத்தின் எஞ்சின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக” கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனடியாக அப்பகுதிக்கு அந்நாட்டு பாதுகாப்பு படைகள் விரைந்துள்ளன. மேலே சுற்றிக்கொண்டிருந்த விமானம் திடீரென அப்பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

விமானம் அங்கிருந்த செல்போன் டவர் ஒன்றில் மோதி பின்னர் தீப்பிடித்து எரிந்துள்ளது.

விமானம் கீழே விழுந்து எரிவது தொடர்பான வீடியோக்கள் பல அங்கிருந்து வெளியாகியுள்ளது. விமானம் விபத்துக்குள் சிக்கியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

விமானத்தில் 90 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்து உள்ளனர். விமானத்தில் இருந்த இருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் எனவும் அந்நாட்டு செய்தி இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.