கத்தரி வெயில் இன்றுடன் விடைபெறுகிறது: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Read Time:1 Minute, 46 Second

தமிழகத்தில் கோடைவெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தாலும், வடதமிழகத்தை தவிர்த்து சில இடங்களில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை சற்று கைக்கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்றும்(வியாழக்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரியில் தலா 2 செ.மீ., ஆண்டிப்பட்டியில் ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.

அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் இன்றுடன் (வியாழக்கிழமை) விடைபெற உள்ள நிலையில் மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருத்தணியில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.