2019 போன்று புல்வாமா மாவட்டத்தில் மீண்டும் தாக்குதலுக்கு திட்டம்..! 45 கிலோ வெடிபொருட்களுடன் சிக்கிய கார் பயங்கரவாதிகளின் சதி முறியடிப்பு!

Read Time:1 Minute, 49 Second

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஒரு கார் சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றது, பாதுகாப்பு படையினர் விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து அந்த கார் நிற்காமல் சென்றது.

உடனடியாக அனைத்து சோதனைசாவடிகளும் உஷார் செய்யப்பட்டது. அந்த கார் அடுத்த சோதனைச்சாவடி அருகே வந்த போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர், இதனால் சுகரித்துக்கொண்ட பயங்கரவாதி காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

காரை சோதனை செய்ததில் 45 கிலோ வெடிபொருட்கள் இருந்தன. பின்னர் அந்த வெடிபொருட்கள் செயல் இழக்கச் செய்யப்பட்டன. இந்த தகவலை காஷ்மீர் மாநில ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி இதே போல் வெடிபொருட்கள் நிரப்பிய காரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்தியதில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

அதேபோல் இப்போதும் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் காரில் வெடிபொருட்களுடன் பயங்கரவாதி வந்ததாக விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதனால் நடைபெற இருந்த பெரும் சதி செயல் முறியடிக்கப்பட்டது.