‘அக்னி நட்சத்திரம்’ விடை பெற்றது.! ஆண்டின் அதிகபட்சமாக திருத்தணியில் 110.8 டிகிரி பதிவானது.!

Read Time:2 Minute, 59 Second

கடந்த மே மாதம் 4-ந்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் ‘கத்தரி வெயில்’ நேற்று தமிழகத்தின் அனேக பகுதிகளில் கன மழையுடன் விடை பெற்றது. பொதுவாக சாதாரண நாட்களை விட அக்னி நட்சத்திரம் காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு அக்னியின் உக்கிரம் சற்று குறைவாகவே இருந்தது. உள் மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் வெயில் சற்று அதிகமாக காணப்பட்ட நிலையில் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கூட தொடாமல் வசந்த காலமாகவே இருந்தது.

அதன் பின்னர் வங்கக்கடலில் உருவாகிய உம்பன் புயல், மேற்கு வங்காளத்தில் கரையை கடந்தது. அதுவரை சாதுவாக இருந்த ‘கத்தரி’ வெயிலை சீண்டிவிட்டது. இதையடுத்து அது தன்னுடைய கோரத்தாண்டவத்தை காட்டத் தொடங்கியது.

20-ந்தேதி மேற்கு வங்காளத்தில் உம்பன் புயல் கரையை கடந்ததில் இருந்து அக்னி போல வெயில் கொளுத்தி எடுத்தது. உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் என பல இடங்களில் வெயில் சதம் அடித்ததோடு மட்டும் அல்லாமல் பாலைவனத்தில் இருப்பது போன்ற உணர்வையும் கொடுத்தது.

இவ்வாறு சென்று கொண்டு இருந்த கத்தரி வெயில் நேற்று பல இடங்களில் வருண பகவான் கருணையால் கன மழையுடன் விடைபெற்றது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பல இடங்களில் பிற்பகலுக்கு பிறகு கருமேகங்கள் சூழ பலத்த காற்று வீசி வெப்பம் தணித்தது.

இந்த ஆண்டு கத்தரி வெயில் காலத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் கடந்த 22-ந்தேதி 110.8 டிகிரி பதிவாகி இருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 2 டிகிரி குறைந்து உள்ளது. கடந்த ஆண்டில் அதிகபட்சமாக வேலூர், திருத்தணியில் 112 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இனி வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் சில இடங்களில் ஓரளவு வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்றும், ஜூன் 1 ந் தேதிக்கு பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெயில் குறைய தொடங்கும் என்றும், அதன் பின்னர் மற்ற பகுதிகளில் படிப்படியாக வெப்பம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.