பிளஸ்-2 வேதியியல் தேர்வில் 31-வது கேள்விக்கு பதிலளிக்க முயற்சித்திருந்தால் போதும் போனஸ் மதிப்பெண்..! தேர்வுத்துறை அறிவிப்பு!

Read Time:1 Minute, 55 Second

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி, 24-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. விடைத்தாள் திருத்தும் பணியில் 43 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த சில நாட்களிலேயே அரசு தேர்வுகள் இயக்கம் வினாத்தாளில் இருந்த தவறுகளை சுட்டிக்காட்டி இருந்தது. அதாவது, வேதியியல் வினாத்தாளில் 31-வது கேள்வியில் ‘புரதத்தின் அமைப்பை பொறுத்து எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?’ என்பதற்கு பதிலாக, ‘புரோட்டீனின் அமைப்பை பொறுத்து எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் ஆங்கிலத்தில் சரியாகவும், தமிழ் மொழி பெயர்ப்பில் தவறாகவும் கேட்கப்பட்டது. மொழி பெயர்ப்பில் பிழை இருந்ததால் அந்தக் கேள்விக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க தற்போது அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விடைத்தாள் திருத்தும் போது தவறான இருந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சித்த தமிழ்வழி கல்வி மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாணவர்கள் அந்த கேள்விக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றாலும், 3 மதிப்பெண்கள் போனஸ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது.