230 கோடியில் நொய்யல் ஆறு புனரமைப்பு.! 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் அடையும்..!

Read Time:1 Minute, 54 Second

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் தொடங்கும் இடம் முதல் 158.35 கி.மீ. வரை உள்ள அணைக்கட்டுகள், குளங்கள், ஆறு மற்றும் கால்வாய்களை விரிவாக்குதல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.230 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக நேற்று அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் நொய்யல் ஆறு சீரமைவதுடன் 18 அணைக்கட்டுகள், 22 முறைசார்ந்த குளங்கள், சிதிலமடைந்த அணைக்கட்டு பகுதிகள், வாய்க்கால்கள், மணல் போக்கியின் மதகுகள், விவசாய நிலங்களுக்கு பிரிந்து செல்லும் வழங்கு வாய்க்காலின் மதகுகளை செப்பனிடுதல், நீர்வரத்து ஓடைகளை புதுப்பித்தல், ஓடைகளில் உரிய தடுப்பணைகளை ஏற்படுத்துதல், குளங்களின் கரைகளை பலப்படுத்துதல், தூர்வாருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுகமாகவும் பயனடையும்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம், தெள்ளூர் கிராமத்தின் அருகே செய்யாற்றின் குறுக்கே ரூ.5 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை உள்பட மொத்தம் ரூ.17 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டிலான கட்டிடப்பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.