திருவாலங்காடு அருகே கி.பி. 1ம் நூற்றாண்டை சேர்ந்த மண்பாண்டங்கள் கண்டெடுப்பு..!

Read Time:2 Minute, 14 Second

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் அருகே உள்ள பழையனூர் ஊராட்சியில் உள்ளது புத்தேரி. இந்த ஏரியில் கிராம ஊராட்சி சார்பில் தூர்வாரி கரையோரம் சாலை அமைப்பதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன் கிராம இளைஞர்கள் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, முதுமக்கள் தாழியின் சில பகுதிகள், மண் பானைகள், நீர் குவளைகள் உள்ளிட்ட பழங்கால மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 27-ம் தேதி, சென்னை தொல்லியல் அலுவலர் ஸ்ரீகுமார், கல்வெட்டு ஆய்வாளர் பாக்கிய லட்சுமி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் விஜயராகவன் ஆகியோர் பழையனூர் புத்தேரியில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களை ஆய்வு செய்தனர். மேலும் அந்த ஏரிப்பகுதியோரம் உள்ள ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்திலும் அகழாய்வு மேற்கொண்டனர். இதில், பழையனூர் புத்தேரியில் கண்டெடுக்கப்பட்டவை கி.பி. 1-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பது தெரிய வந்தது.

தொல்லியல் துறை அதிகாரிகள் ஸ்ரீகுமார், பாக்கியலட்சுமி கூறும்போது, “பழையனூர் புத்தேரியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால மண்பாண்டங்கள் குறித்த முழுமையான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்போம். அனுமதி கிடைத்தவுடன் தொடர்ந்து அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு அகழாய்வு செய்யும் போது, இன்னும் அதிகமான பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் ஏரிக்கரையோரம் உள்ள மிகவும் பழமையான ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றையும் ஆய்வு செய்ய உள்ளோம்.” என்றனர்.