TRAI: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்), இந்தியாவில் உள்ள மொபைல் போன்களுக்கான 10 இலக்கு எண்ணை 11 இலக்கு எண்ணாக மாற்றுவதற்கு பரிந்துரை செய்துள்ளது.
தகவல் தொடர்பு மற்றும் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2050 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் 2.6 பில்லியன் புது எண்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைப்பேசி இணைப்புகளின் தேவை எண்ணிக்கை அதிகரிப்பதே இந்த நடவடிக்கைக்கான முக்கிய காரணம் என்று டிராய் இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது.
இது குறித்து டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது வழங்கப்படும் 10 இலக்க எண்களுக்கு பதில், 11 இலக்க எண்களாக வழங்கலாம். தற்போது லேண்ட் லைன் மூலம் மொபைல் எண்களை தொடர்பு கொள்ளும் போது 10 இலக்க எண்களுக்கு முன் பூஜ்யத்தைப் பயன்படுத்தலாம். இப்படி 11 இலக்க எண்களாக மாற்றும் போது புதிய தொடர்பு எண்கள் வழங்குவது எளிதாக இருக்கும்.”
இந்த கொள்கைப்படி, 11 இலக்க எண்கள் ஒதுக்கப்பட்டால், 1000 கோடி தொடர்பு எண்கள் புதிதாக வழங்க முடியும். அதில் இந்தியாவின் தேவை 70 சதவீதம் பூர்த்தியாகும்.
மேலும், டேட்டா பயணப்பாட்டிற்கு (டாங்கிள் இணைப்புகளுக்கு) மட்டும் பயன்படுத்தும் எண்களை 10 இலக்கங்களிலிருந்து 13 இலக்க எண்களாக வழங்கவும் பரிந்துரைத்து உள்ளதாக டிராய் கூறியுள்ளது.