இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துவிட்டது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடூர கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க இந்தியாவில் 4 கட்டங்களாக தொடர்ந்து 68 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
4-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் கொரோனா வைரஸ் புதிய உச்சத்தை தொட்டது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு (கடந்த 24 மணி நேரங்களில்) நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 190,535 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 230 பேரின் உயிரையும் இந்த கொரோனா பறித்து இருக்கிறது.
இதனால் நாட்டில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையும் 5,394 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா வைரஸ் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 2,286 பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் அதிகமான உயிரிழப்பை கண்டுள்ளன. தமிழகத்தில் 173 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையிலும் மராட்டியமே முதல் இடம் வகிக்கிறது. அங்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,655 ஆக உள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிப்பு 22,333 ஆக இருக்கிறது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் இந்த எண்ணிக்கை 19,844-ஐ தாண்டி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர்களில் 49% பேர் குணம் அடைந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதில் மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயமாம் பாதிப்பில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையாகும். இந்தியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து 4,500 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 90,000-த்தை தாண்டியுள்ளது.